31 ஆண்டுகளுக்கு
முன்
இலங்கை – இந்திய
ஒப்பந்தமும்
ராஜீவ் காந்தி மீது
தாக்குதலும்
இந்தியக்
குடியரசின் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் 1987-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் திகதி கொழும்பு நகரில் சந்தித்துக்கொண்டனர்.
இலங்கை – இந்திய ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் தொன்று தொட்ட நட்புறவைப்
பலப்படுத்தவும், அதனை வளர்த்து, பராமரிக்கும் உயர்மிகு முக்கியத்துவத்தை இணைத்து, இலங்கையின்
இனப்பிரச்னையைத் தீர்க்கும் உடனடித் தேவைக்கு ஏற்ப, இலங்கையில் வசிக்கும் அனைத்து இன
மக்களின் பாதுகாப்பு வளமை, மேம்பாடு ஆகியவற்றுக்காகவும், வன்முறையைத் தவிர்ப்பதற்காகவும்.
இந்த இலக்கினை நிறைவேற்றும் வகையில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் இந்த நாளில் கையெழுத்திடப்படுகிறது.
இதன் தொடர்பாக,
1.1)
இலங்கையின் ஒற்றுமை, இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பராமரிப்பதில் ஆர்வம்
கொண்டு,
1.2)
இலங்கை பல இன, பல மொழி பேசும் மக்களை அதாவது சிங்களர், தமிழர், முஸ்லீம்கள் (மூர்ஸ்),
பறங்கிகள் ஆகியோரைக் கொண்டது என்பதையும் அங்கீகரிக்கிறது.
1.3)
ஒவ்வொரு இனமும் கவனமாகப் போற்றப்பட்டவேண்டிய, தனி கலாசார, மொழியை, தனித்துவத்தைக் கொண்டது;
அவற்றை வளர்ப்பது அவசியம் என்பதை ஏற்று,
1.4)
இலங்கைத் தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாக, வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இருந்து
வந்திருக்கின்றன. இங்கு மற்ற இனத்தவருடன் தமிழர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதையும்
அங்கீகரிக்கிறது.
1.5)
இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றை பலப்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து,
இலங்கையின் பல இன, பல மொழி மதங்கள் கொண்ட சமூகத்தின் தன்மையையும் பாதுகாக்கும் தேவையையும்
மனதில் கொண்டு அதன் அனைத்துக் குடிமக்களும் உரிமைகளுடனும், மகிழ்ச்சியோடும் வாழ கீழ்க்கண்டவாறு
முடிவு செய்யப்படுகிறது.
2.1)
கீழ்க்கண்டவாறு வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த நிர்வாகப் பகுதியாக இணையவும்
இதனை வாக்கெடுப்பு மூலம் தனியாகப் பிரிக்கவும், அனுமதிக்க இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது.
2.2)
மாகாண சபைக்கான தேர்தல் திகதி பத்தி 2.8-இல் குறிப்பிட்டுள்ளபடியும் நிர்வாகப் பகுதியாக
தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபையுடன் இயங்கும். இந்த ஒன்றிணைந்த நிர்வாகப் பகுதிக்கு
ஓர் ஆளுநரும், ஒரு முதல்வரும், ஓர் அமைச்சரவையும் இருக்கும்.
2.3)
1988-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் திகதியோ அதற்கு முன்னரோ ஒரு பொதுமக்கள் வாக்கெடுப்பு
நடைபெறும். இந்த வாக்கெடுப்பு,
அ)
வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் ஒரே நிர்வாகப் பகுதியாக இணைந்து இருப்பதா? தொடர்ந்து
2.2-இல் கண்டுள்ளபடி ஆளப்படுவதா அல்லது
ஆ)
கிழக்கு மாகாணம் தனி நிர்வாகப் பகுதியாக தனக்கென தனி மாகாண சபை, தனி ஆளுநர், தனி முதல்வர்,
தனி அமைச்சரவையுடன் இயங்குவதா என்பதைத் தீர்மானிக்கும். இலங்கை ஜனாதிபதி தனது அதிகாரத்தைப்
பயன்படுத்தி, அத்தகைய பொதுமக்கள் வாக்கெடுப்பை ஒத்தி வைக்கவும் உரிமை உண்டு.
2.4)
இன வன்முறை அல்லது மற்ற காரணங்களுக்காக அல்லது வேறு காரணங்களுக்காகவும் இடம் பெயர்ந்தவர்களும்
அத்தகைய பொதுமக்கள் வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமை உண்டு. அவர்கள் எந்த இடத்திலிருந்து
வெளியேறினார்களோ அந்த இடங்களுக்குத் திரும்பத் தேவையான சூழ்நிலைகள் உருவாக்கப்படும்.
2.5)
அத்தகைய பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும்போது, இலங்கைத் தலைமை நீதிபதி தலைமையில்
இலங்கை அரசால் குறிப்பிடப்பட்டு, இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒருவர், கிழக்கு
மாகாணத் தமிழர்களின் பிரதிநிதிகளினால் குறிப்பிடப்பட்டு, ஜனாதிபதியால் நியமிக்கப்படும்
ஓர் உறுப்பினர், ஆகியோரைக் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும்.
2.6)
பொதுமக்கள் வாக்கெடுப்பு முடிவு சாதாரண பெரும்பான்மை அடிப்படையில் அமையும்.
2.7)
பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு முன்னதாக இலங்கை சட்டங்கள் அனுமதிக்கும் வகையில் பிரசாரம்
செய்ய அனுமதிக்கப்படும்.
2.8)
மாகாண சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்த 3 மாதங்களுக்குள் 1987 டிசம்பர் 31-ஆம்
திகதிக்கு முன்னதாக நடைபெறும். வடக்கு - கிழக்கு மாகாண தேர்தல்களின்போது இந்தியப் பார்வையாளர்கள்
அழைக்கப்படுவர்.
2.9)
1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் திகதி வாக்கில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அவசர கால
நிலை நீக்கப்படும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்திற்குள் போர் நிறுத்தம்
அமலுக்கு வரும். போராளிகள் தங்களது ஆயுதங்களை இலங்கை அரசு குறிப்பிடும் அதிகாரிகளிடம்,
ஒத்துக்கொள்ளப்பட்ட நடைமுறைப்படி ஒப்படைப்பார்கள். போர் நிறுத்தம், ஆயுத ஒப்படைப்பு
ஆகியவைகளின் விளைவாக இலங்கை ராணுவமும் மற்ற பாதுகாப்புப் படைகளும் 1987-ஆம் ஆண்டு மே
மாதம் 25-ஆம் திகதி நிலைப்படி தங்களது முகாம்களுக்குத் திரும்ப வேண்டும். ஆயுத ஒப்படைப்பு,
இலங்கை பாதுகாப்புப் படைகள் முகாம்களுக்குத் திரும்புவது ஆகியவை போர் நிறுத்தம் ஏற்பட்ட
72 மணி நேரத்திற்குள் நடைபெறும்.
2.10)
வடக்கு-கிழக்கு மாகாணங்களின் சட்ட அமுல், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக
நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளது போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படும்.
2.11)
எல்லா அரசியல் கைதிகளுக்கும், பயங்கரவாதச் சட்டம், மற்ற அவசரநிலைச் சட்டங்களின் கீழ்
சிறையிலுள்ள, வழக்கு விசாரணையில் உள்ளவர்களுக்கும் மற்றும் போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு
வழங்கப்படும். தேசிய வாழ்க்கை நீரோட்டத்திற்கு போராளி இளைஞர்களைக் கொண்டுவர விசேஷ முயற்சிகளை
இலங்கை அரசு மேற்கொள்ளும். இந்த முயற்சிகளுக்கு இந்திய ஒத்துழைப்பு வழங்கும்.
2.12)
மேலே கண்ட ஷரத்துகள் அனைத்தையும் இலங்கை அரசு ஏற்று அமுல் செய்யும். மற்றவர்களும் அவ்வாறே
செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2.13)
இந்தத் தீர்மானங்களுக்கான சட்டவரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டதும் சம்பந்தப்பட்ட முன்மொழிவுகளை
இலங்கை அரசு உடனடியாக அமுல் செய்யும்.
2.14)
இந்தத் தீர்மானங்களுக்கு இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கும். இந்தத் திட்டங்களை அமுல்படுத்துவதில்
ஒத்துழைக்கும்.
2.15)
இந்தத் திட்டங்கள் 4-5-1986-ஆம் திகதிக்கும் 19-12-1986-ஆம் திகதிக்கும் இடைக்காலத்தில்
விவாதிக்கப்பட்ட தீர்வாலோசனைகளை ஏற்பது என்னும் நிபந்தனையையே தீர்வாலோசனைகள் கொண்டுள்ளன.
மேற்கண்ட காலத்தில் இறுதியாக்கப்படாத விவரங்கள் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்
திகதியிலிருந்து ஆறு வார காலத்திற்குள் இந்திய - இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தைகள்
மூலம் தீர்வு காணவேண்டும். மேலும் இலங்கை அரசோடு, இந்திய அரசு நேரடியாக இந்தத் திட்டங்களை
அமுல் செய்ய ஒத்துழைப்பதையும் நிபந்தனைகளாகக் கொண்டுள்ளன.
2.16)
மேலும் இந்த ஒப்பந்தத் திட்டங்களை இலங்கையில் செயல்படும் எந்த ஒரு போராளிகளின் குழுவாவது
ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் இந்தத் திட்டங்கள்
நிபந்தனைகளாகக் கொண்டுள்ளன. இதன்படி,
அ)
இலங்கை ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு இந்தியப் பகுதி பயன்படுத்தப்படாமல்
பார்த்துக்கொள்ள இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆ) தமிழ்ப் போராளிகள்
நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கைக் கடற்படையுடன் இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை
ஒத்துழைப்பு தரும்.
இ)
இந்தத் திட்டங்களை அமுல் செய்ய ராணுவ உதவி வழங்கும்படி இலங்கை அரசு கோரினால், அந்த
உதவியை இந்தியா வழங்கும்.
ஈ)
இலங்கையில் உள்ள இந்தியக் குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை
இந்திய அரசு துரிதப்படுத்தும். அதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அகதிகள் இலங்கை
திரும்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உ)
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வாழும் அனைத்து இனத்தவரின் உயிருக்கும் உடலுக்கும் ஊறு
விளை ஏற்படாமல் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய-இலங்கை அரசுகள் ஒத்துழைக்கும்.
2.17)
இந்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள வடக்கு - கிழக்கு மாகாணத் தேர்தல்களில் அனைத்து இனத்தவரும்
சுதந்திரமாக, முழுமையாக, நேர்மையாகப் பங்கு பெறுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக இலங்கை அரசுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும். 2.18) இலங்கையின்
அரசு அலுவல் மொழி சிங்களமாக இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கிலம் கூட அலுவல் மொழியாக
இருக்கும்.
3.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும் அமுலுக்கு வரும். அதிகாரப்பூர்வமான அசல் நகல் உள்ளிட்ட
இரண்டு பிரதானப் பகுதிகளையும் 1987-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் திகதிநாள் அன்று இலங்கை
கொழும்புவில் நம் இருவரின் சாட்சிப்படி இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம்.
ஒப்பந்தத்தின்
முடிவில் இந்தியக் குடியரசின் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின்
ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தம்
கைச்சாத்திட்ட பின்னர் இந்தியா திரும்ப
இருந்த ராஜீவ்
காந்திக்கு கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட
இருந்தது. பல்வேறு
ஒத்திகைக்குப் பின்னர் அந்த நேரமும் வந்தது.
ராஜீவ் காந்தியின்
பாதுகாப்பு அதிகாரிகள் அணிவகுப்பு குறித்து ஆய்வு
செய்து ஒப்புதலும்
அளித்தனர்.
அவர்கள்
ஆய்வு செய்த
முக்கிய விஷயம்
என்னவென்றால், அணிவகுப்பு மரியாதையில் வீரர்கள் பிடித்திருக்கும்
துப்பாக்கிகளில் குண்டுகள் உள்ளதா என்பதைக் கண்டறிவதுதான்!
இந்த ஆய்வு
மேற்கொள்ளப்படவேண்டிய அவசியம் எகிப்து
ஜனாதிபதி அன்வர் சதாத் சுட்டுக்கொல்லப்பட்டதையொட்டி
நடைமுறைக்கு வந்தது.
1978-இல் எகிப்து ஜனாதிபதி அன்வர் சதாத்
இஸ்ரேலியப் பிரதமர் பெனகம் பெகினுடன், அமெரிக்க
ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் முன்னிலையில்
ஓர் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டார். "காம்ப் டேவிட்
ஒப்பந்தம்' என்று அழைக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை
அரபுநாடுகள் கடுமையாக எதிர்த்தன. இதன் காரணமாக
எகிப்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில்,
1981-ஆம் ஆண்டில்
எகிப்து ஜனாதிபதி அன்வர் சதாத், தனது நாட்டின்
அணிவகுப்பில், தனது வீரனாலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதன்பின் உலகநாடுகள்
அணிவகுப்பு துப்பாக்கிகளில் குண்டு நிரப்புவதைத் தடைசெய்தனர்.
இதே
நடைமுறைப்படிதான் ராஜீவ் காந்தியின் பாதுகாப்புப் பிரிவினரும்
சோதனை மேற்கொண்டனர்
என்பதைக் கவனத்தில்
கொள்ள வேண்டும்.
இந்த அணிவகுப்பு
மரியாதைக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டவர் ஜே.ஆர்.
ஜெயவர்த்தனாவின் மகன் ரவி ஜெயவர்த்தனா.
அவர்
ராணுவத்தினருக்கு அணிவகுப்பில் பயன்படுத்தும்
துப்பாக்கிகளில் குண்டுகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டபோது ராணுவத்
தலைமை இதற்கு
எதிர்ப்பு தெரிவித்தது.
ராணுவ வீரர்களின்மீது
அவநம்பிக்கை கொண்டதாக இச்செயல் அமையும் என
வாதிட்டனர். ஆனால், ராஜீவ் காந்தி அணிவகுப்பில்
ஏதேனும் அசம்பாவிதம்
நடந்தால் நிலைமை
மோசமாகிவிடும் என்று ரவி ஜெயவர்த்தனா, குண்டுகளை
அகற்றும்படி உத்தரவிட்டிருந்தார்.
இந்தச்
சூழ்நிலையில், ராஜீவ் காந்தி அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு
வருகையில், கடற்படையைச் சேர்ந்த விஜயமுனி விஜிதா
ரோகண டி
சில்வா என்கிற
சிப்பாய் தான்
பிடித்திருந்த துப்பாக்கியின் அடிக்கட்டையால்,
ராஜீவ் காந்தியின்
பின்தலையில் வேகமாகத் தாக்க முயன்றார். பின்தலையில்
தாக்கினால் ஒரு மனிதன் செயலிழப்பான் என்பது
ராணுவப் பயிற்சியில்
சொல்லிக்கொடுக்கப்படும் சூத்திரங்களில் ஒன்று.
இவ்வாறு சிப்பாய்
தாக்குவதை உணர்ந்த
ராஜீவ் காந்தி
தலையைக் குனிந்துகொண்டு
அப்பால் நகர்ந்தார்.
துப்பாக்கியின் அடிக்கட்டை அவரது தோளில் பட்டது.
ராணுவ
உயர் அதிகாரிகள்,
ஜெயவர்த்தனாவின் சகாக்கள் முன்னிலையில்தான் இச்சம்பவம் நடைபெற்றது.
ஆனால் ராஜீவின்
பாதுகாப்பு அதிகாரிதான் ஓடோடிச்சென்று அந்தச் சிப்பாயை
இயங்கவிடாமல் பிடித்து அமுக்கினார்.
முரண்பாடுகள்
நிறைந்த, பிரச்னைகளின்
வடிவிலான இந்திய-இலங்கை ஒப்பந்தம்
கையெழுத்தானது. பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை
ஜனாதிபதி ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தப்
பிரதிகளை பரஸ்பரம்
மாற்றிக்கொண்டனர்.
0 comments:
Post a Comment