வசீம் தாஜூதீன் கொலை சம்பவம் தொடர்பாக
சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை
கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு
நீதிமன்றம் உத்தரவு



பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுரு நெத்திகுமார, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

தாஜூதீன் கொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தகவல்களை மறைத்தமை மற்றும் போலி ஆவணங்களை தயாரித்தமை ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதால், கொலையுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதவான் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக இதுவரை 1200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான அறிக்கைகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தாஜூதீனின் தொலைபேசி சம்பந்தமான ஆய்வு விசாரணை 172 பக்கங்களை கொண்டது எனவும் இது நீண்ட விசாரணை எனவும் இதன் காரணமாக சந்தேகநபர்களை கைது செய்ய காலதாமதமாகும் எனவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தாஜூதீன் கொலை நடந்த தினத்தில் அவரது காரை பின் தொடர்ந்து சென்ற வாகனத்தில் சென்ற நபர் அணிந்திருந்த ஆடை மற்றும் அந்த வாகனத்தின் இலக்கம் தொடர்பில் பாதுகாப்பு கெமராவில் பதிவாகிய காணொளிக்கு அமைய விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top