மஹிந்தவைப் பிரதமராக்கியது டட்லி சிறிசேனவா?
உதயங்க கிளப்பியுள்ள புதிய சர்ச்சை



ஹிந்த ராஜபக்ஸவைப் பிரதமராக நியமிக்குமாறு ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்மொழிந்தது, அவரது சகோதரரான டட்லி சிறிசேனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேன பொலன்னறுவவில் பிரபலமான அரிசி ஆலை வணிகராவார்.

அவரது 58 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரும், மஹிந்த ராஜபக்ஸவுக்கு நெருக்கமானவருமான உதயங்க வீரதுங்க, வாழ்த்துச் செய்தி ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

இதில், டட்லி சிறிசேனவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருப்பதுடன், மஹிந்த ராஜபக்ஸவைப் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் மொழிந்தமைக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தன்னையும் கோத்தாபய ராஜபக்ஸவையும் கொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறியதால் தான், ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கி விட்டு, மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

ஆனால், டட்லி சிறிசேனவின் பரிந்துரைக்கமையவே மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டார் என்ற உதயங்க வீரதுங்கவின் பதிவு புதிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

அத்துடன், மிக் போர் விமானக் கொள்வனவு ஊழல் தொடர்பான வழக்கில் இலங்கையில் தேடப்படும் நபரான உதங்க வீரதுங்கவுக்கும் ஜனாதிபதியின் சகோதரருக்கும் இடையிலான நெருக்கம் குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top