சுங்க பணிப்பாளரை பதவியில் இருந்து நீக்கியது தவறு
அவரை போன்ற திறமையான அதிகாரிகள்
பாதுகாக்கப்படல் வேண்டும்
அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தெரிவிப்பு



சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்து பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், நீக்கப்பட்டமை தவறானது எனவும் அவரை போன்ற திறமையான அதிகாரிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவத்துடன் அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு தொடர்பு இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சரவையின் முடிவுக்கு அமையவே சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நீக்கப்பட்டார். அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு கூட்டான பொறுப்பு இருப்பதால், நான் அதனை விமர்சிக்கவில்லை.

இதனை தவிர சுங்க திணைக்கள பணிப்பாளரை நீக்கிய சம்பவத்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. தொழிற்சங்கங்கள் சுமத்தும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.

பீ.எஸ்.எம். சார்ள்ஸை மீண்டும் சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்குமாறு, நிதியமைச்சரிடம் கோரியுள்ளேன்.

பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், 2009 ஆம் ஆண்டு சுமார் மூன்று லட்சம் பேர் இடம்பெயர்ந்திருந்த நேரத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய சேவைகள் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் பாராட்டுக்களை பெற்றன.

இதனால், இப்படியான அதிகாரிகள் தமது சேவையை வெற்றிகரமாக செய்ய உதவ வேண்டும் எனவும் அமைச்சர் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top