புற்றுநோய் பாதித்த 7 வயது
இந்தியச் சிறுவனின் ஆசையை
நிறைவேற்றிய துபாய் இளவரசர்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 7 வயது இந்தியச் சிறுவனின் நெடுநாள் ஆசையை துபாய் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் நிறைவேற்றி வைத்துள்ளார்.
இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபத்தை சேர்ந்த முஹம்மது தஜாமுல் ஹுசைன் என்பவர் துபாயில் தொழில் செய்தவாறு தனது மனைவி, பிள்ளைகளுடன் அங்கேயே வாழ்ந்து வருகிறார்.
இவரது 7 வயது மகன் அப்துல்லாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கழுத்தில் தோன்றிய ஒரு கட்டி, நாளுக்குநாள் வேகமாக வளர்ந்து பெரிதாகிக் கொண்டே போனது.
மருத்துவர்கள் நடத்திய ’பயாப்சி’ பரிசோதனையில் அது புற்றுக்கட்டி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
கட்டியினால் ஏற்பட்ட வலி, வேதனை மற்றும் ‘கீமோதெராபி’ சிகிச்சை ஆகியவற்றால் அப்துல்லாவால் பள்ளிக் கல்வியை தொடர இயலவில்லை.
இதனால் வீட்டில் ஓய்வாக இருந்த வேளைகளில் ’யூடியூப்’ வலைத்தளத்தில் வீடியோக்களை பார்ப்பதில் அப்துல்லா ஆர்வம் காட்ட ஆரம்பித்தான். இந்த வீடியோக்களில் துபாய் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பற்றிய சில தொகுப்புகள் அவனை வெகுவாக கவர்ந்திழுத்தன.
நாளடைவில், பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தானின் தீவிர விசிறியாக மாறிப்போன அப்துல்லா, அவரை எப்படியாவது ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்னும் தனது பேரார்வத்தை பெற்றோரிடம் தெரிவித்திருந்தான்.
இந்த தகவல் சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலமாக பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் கவனத்துக்கு சென்றது. தற்போது புற்றுநோயின் மூன்றாம் நிலை தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கும் இந்தியச் சிறுவன் அப்துல்லாவை சந்திக்க அவர் உடனடியாக விருப்பம் தெரிவித்தார்.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் வாழும் அரண்மனைக்கு தனது பெற்றோருடன் சென்ற அப்துல்லா அவரை ஆரத்தழுவி, அவருடன் பேசிச் சிரித்து மகிழ்ந்தான்.
சுமார் 15 நிமிடங்கள் நிகழ்ந்த இந்த அபூர்வ சந்திப்பின்போது பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் வெளிப்படுத்திய அன்பு மற்றும் அவரது எளிமையான - அடக்கமான அணுகுமுறைகள் போன்றவை தங்களை வெகுவாக வசீகரித்து விட்டதாக அப்துல்லாவின் தாயார் நவ்ஷீன் பாத்திமா பூரிப்புடன் கூறுகிறார்.
அப்துல்லாவை பாதித்துள்ள நோய்க்கு இனி செய்ய திட்டமிட்டுள்ள சிகிச்சை முறைகளை இளவரசர் ஷேக் ஹம்தான் அக்கறையுடன் கேட்டறிந்ததுடன் இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை ‘துணிச்சல் மிக்க இந்தச் சிறுவனை இன்று சந்தித்தேன்’ என்ற குறிப்புடன் தனது ‘இன்ஸ்ட்டாகிராம்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் இளவரசரின் அரண்மனை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் அவர் வளர்த்துவரும் யானை, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட செல்லப் பிராணிகளுடன் அப்துல்லா சுமார் ஒரு மணிநேரம் செலவிட்டு மகிழ்ந்ததாக துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment