இன்று தனது 90-வது பிறந்த தினத்தை கொண்டாடும்
இராணி எலிசபெத்
ஆட்சிபீடம் ஏறியதில் விதி செய்த விளையாட்டு!
தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவர் இன்று தனது 90-வது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்.
ராணி எலிசபெத்தின் முப்பாட்டனாரின் மனைவி விக்டோரியா, 1837–ம் ஆண்டு ஜூன் 20–ந் திகதி முதல் 1901–ம் ஆண்டு ஜனவரி 22–ந் திகதி வரை இங்கிலாந்தின் ராணியாக ஆட்சிபீடத்தில் இருந்தார். அதாவது, அவரது ஆட்சி காலம் 63 ஆண்டுகள் 216 நாட்கள் ஆகும்.
ராணி விக்டோரியா தான் இதுவரை இங்கிலாந்திலேயே மிக அதிக காலம் ஆட்சியில் இருந்தவர் என்ற பெருமை பெற்று இருந்தார். அந்த சாதனையை தற்போதைய ராணி எலிசபெத் முறியடித்தார்.
ராணி எலிசபெத்தின் தந்தையான மன்னர் ஆறாம் ஜார்ஜ், 1952–ம் ஆண்டு பிப்ரவரி 6–ந் திகதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு எலிசபெத், இங்கிலாந்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றார். அவரது பதவி ஏற்பு விழா 1953–ம் ஆண்டு ஜூன் 2–ந் திகதி நடைபெற்றது.
இதனால், கடந்த ஆண்டில் தனது முப்பாட்டியின் சாதனையான 63 ஆண்டுகள் 216 நாள் ஆட்சி என்ற சாதனையை ராணி எலிசபெத் முறியத்தார்.
சாதனை ராணி எலிசபெத், இங்கிலாந்து நாட்டின் ராணியாக ஆட்சிபீடம் ஏறியதில் விதி செய்த விளையாட்டு என்ன என்பதைப் பார்க்கலாம்.
இங்கிலாந்து நாட்டு மன்னராட்சி முறைப்படி, அந்த நாட்டின் மன்னர் அல்லது ராணியின் மூத்த மகன் அடுத்து அரியணை ஏறுவார். ஆட்சியில் இருப்பவருக்கு மகன் இல்லை என்றால் ஆட்சிப் பதவி மகளுக்கு சென்றுவிடும். இவர்களைத் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், எலிசபெத் விஷயத்தில் நடந்ததே வேறு.
இங்கிலாந்தை ஆட்சி செய்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு இரண்டு மகன்கள். இவர்களில் மூத்தவர் பெயர் எட்வர்ட். இளையவர் பெயர் ஆல்பர்ட்.
மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மறைவுக்கு பிறகு, ஏற்கனவே உள்ள வழக்கப்படி, மூத்தவரான எட்வர்ட் மன்னராக ஆனார். அவரைத் தொடர்ந்து அவரது பரம்பரை தான் அரியணை ஏறி இருக்க வேண்டும்.
அந்த சமயத்தில் தான் விதி விளையாடியது. மன்னர் எட்வர்டுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வாலிஸ் சிம்ப்சன் என்ற விவாகரத்தான ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. முறையற்ற காதலை அரண்மனை நிர்வாகம் ஏற்றுக்கொள்வது இல்லை.
எனவே மன்னர் எட்வர்டுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. காதலுக்காக மன்னர் என்ற பதவியைத் துறப்பதா? அல்லது காதலியை கைவிட்டு மன்னராக நீடிப்பதா? என்ற மகத்தான கேள்வி எழுந்தது. அப்போது மன்னர் எட்வர்ட், துணிந்து ஒரு முடிவு செய்தார். எனக்கு மன்னர் பதவி தேவை இல்லை. எனக்கு எனது காதலிதான் முக்கியம் என்று கூறிவிட்டார்.
இதனால் அவர் மணி முடியைத் துறந்து, ஆட்சி பீடத்தில் இருந்து இறங்க வேண்டியதாகி விட்டது. அவருக்கு குழந்தைகள் இல்லை என்பதால், அடுத்து மன்னராக பதவி ஏற்கும் வாய்ப்பு, அவரது பரம்பரைக்கு இல்லாமல், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் இளைய மகன் ஆல்பர்ட்டுக்கு கிடைத்தது. அதாவது, ஒரு காதல் விவகாரத்தால், ஆட்சி முறை என்ற வழித்தடமே அப்போது மாறிவிட்டது.
எலிசபெத்தின் தந்தை, ஆல்பர்ட், ஆறாம் ஜார்ஜ் மன்னராக முடி சூட்டிக்கொண்டார். மன்னர் ஆறாம் ஜார்ஜுக்கு இரண்டு மகள்கள். அவர்களில் மூத்தவர் எலிசபெத். இளையவர் மார்கரெட்.
மன்னர் ஆறாம் ஜார்ஜின் மூத்த மகள் என்பதால், எலிசபெத், இங்கிலாந்தின் அடுத்த ராணி ஆகும் வாய்ப்பு உருவானது.
எலிசபெத்தின் பெரியப்பா எட்வர்ட், தனது காதலியை கைவிட்டு, அரியணையில் தொடர்ந்து வீற்றிருந்தால், எலிசபெத், இங்கிலாந்தின் ராணியாக வந்து இருக்கவே முடியாது. பெரியப்பாவின் காதல் விவகாரத்தால் எலிசபெத், இங்கிலாந்தின் ராணி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
இராணி எலிசபெத் காலத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி டேவிட் கேம்ரூன் வரை மொத்தம் 12 பிரதமர்களை அவர் சந்தித்துள்ளார்.
எலிசபெத் உலகம் முழுவதும் 117 நாடுகளில் 1.7 மில்லியன் கிலோமீட்டர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு பாஸ்போர்ட் இல்லை.
எலிசபெத்தின் கணவர் பிலிப். இருவருக்கும் திருமணம் ஆகி 68 வருடங்கள் ஆகியுள்ளன.
1926-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் திகதி எலிசபெத் இங்கிலாந்தின் புருடன் தெருகில் உள்ள எலகண்ட் இல்லத்தில் பிறந்தார். அந்த ஆடம்பரமான வீடு இரண்டாம் உலகக் போரில் குண்டு மழைக்கு இரையானது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment