முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளுக்கு

தீர்வுகளை காண்பதற்கு பெரிதும் உதவியவர்

எம்.எச். முஹம்மத் மறைவு குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம்



இலங்கையின் முதுபெரும் முஸ்லிம் அரசியல் தலைவர்களில் ஒருவரான மறைந்த எம்.எச். முஹம்மத் அவர்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கு பெரிதும் உதவியதோடு, பெரும்பான்மை சிங்கள மக்கள் உட்பட அனைவரினதும் அபிமானத்திற்குரியவராகவும் திகழ்ந்தவர் என அன்னாரது மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
மறைந்த மூத்த அரசியல்வாதி மர்ஹூம் எம்.எச். முஹம்மத் அரசியலிலும், ஆன்மீகத்திலும், சமூக வாழ்விலும் பன்முக பரிமாணம் கொண்டவராக மிளிருவதோடு, எந்தவிதமான சவால்களையும் துணிச்சலுடன் எதிர்நோக்கக் கூடியவராகவும் விளங்கினார். அதற்கு அவரது 95 வருடகால வாழ் நாளில் நிறைய சான்றுகள் உள்ளன.
இலங்கை அரசாங்கத்தில் பல்வேறு அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சராகவும், பாராளுமன்றத்தின் 14 ஆவது சபாநாயகராகவும் பதவிவகித்; மர்ஹூம் எம்.எச். முஹம்மத், கொழும்பு மாநகரசபையை அலங்கரித்த முதல் முஸ்லிம் மேயராகவும் வரலாற்றில் தடம்பதித்துள்ளார்.
1956 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வக்ப் மற்றும் தர்மச் சொத்து சட்டத்திற்கு 1982 ஆம் ஆண்டில் தாம் கொண்டுவந்த திருத்தத்தின் ஊடாக அச்சட்டத்தின் கீழ் இருந்த பள்ளிவாசல்களோடு, தக்கியாக்கள், சாவியாக்கள், தர்ஹாக்கள் என்பனவற்றையும் உள்வாங்கியதன் ஊடாக, 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்நாட்டில் உக்கிரமடைந்த முஸ்லிம்களுக்கெதிரான அரச பின்புலத்துடனான வன்செயல்களின் விளைவாக முஸ்லிம் சமயத் தளங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கு சட்டரீதியான முக்கியத்துவத்தை வழங்குவதற்கு பெரிதும் வாய்ப்பாக அமைந்ததை நாம் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியறிதலோடு நினைவு கூர்வதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
இஸ்லாமிய நிலையத்தின் ஆயுள் காலத் தலைவராகவும் விளங்கிய மர்ஹூம் எம்.எச். முஹம்மத், 'ராபியத்துல் ஆலமுல் இஸ்லாமி' என்றஉலக இஸ்லாமிய அமைப்பின் இலங்கை பிரதிநிதியாகவும் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.அதன் மூலம் அவரது சன்மார்க்க பணிகளுக்கு அரபு உலகத்தினதும், இஸ்லாமிய நாடுகளினதும் அங்கீகாரம் கிடைத்ததோடு, சர்வதேச ரீதியாகவும் நன்கறியப்பட்டார்.
இலங்கையில் 1980 ஆம் ஆண்டில் ஹிஜ்ரி 1400 ஆண்டு நிறைவை ஒரு தேசிய விழாவாக வெகு கோலாகலமாக கொண்டாடிய பெருமை அன்னாரையே சாரும். திருக்குர்ஆனுக்கும் அவர் அதிக முக்கியத்துவமளித்தார்.

தாம் பிரதிநிதித்துவப்படுத்திய பெரும்பாலும் சிங்கள வாக்காளர்களை கொண்ட பொரளை தொகுதியின் அசைக்க முடியாத அரசியல்வாதியாகவும் அவர் விளங்கினார். அன்னாருக்கு எல்லாம் வல்லஅல்லாஹ் மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவன வாழ்வை அருள்வானாக.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top