குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய
சில நல்ல பழக்கவழக்கங்கள்
அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும்.
எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள்.
இப்போது குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டிய சில நல்ல பழக்கங்களை பார்க்கலாம்.
* நிறைய குழந்தைகள் பல் தேய்க்கவே சோம்பேறித்தனப்படுவார்கள். எனவே புரியாத வயதுள்ள குழந்தைகளாக இருந்தால், அவர்களை அழைத்து பற்களை தேய்த்துவிடுங்கள். அதுவே புரிந்து கொள்ளும் வயதுள்ளவர்களாக இருந்தால், அவர்களுக்கு பற்களை தினமும் இரண்டு முறை தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளைச் சொன்னால், அவர்களே தினமும் பற்களை தேய்க்க வேண்டுமென்று உங்களை தேடி வருவார்கள்.
* நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழுப்பி விடுவார்கள். உண்மையில் அவ்வாறு எழுப்புவது நல்ல பழக்கமல்ல. சொல்லப்போனால் அது அவர்களது உடலுக்கு கெட்டதைத் தான் விளைவிக்கும். எப்படியெனில், சிறு குழந்தைகளுக்கு 8-9 மணிநேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்து எழுப்ப வேண்டாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்க விடக் கூடாது. இல்லாவிட்டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்கமாகிவிடும்.
* குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, பால் குடிக்கும் போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக்கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும்.
* குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது ‘நன்றி’ மற்றும் ‘தயவு செய்து’ போன்ற மரியாதையான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
* பகிர்ந்து கொள்வது என்பது ஒருவிதமான சந்தோஷம். ஆனால் தற்போதுள்ள குழந்தைகள் இதனை செய்வதில்லை. மேலும் தற்போதைய பெற்றோர்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதால், குழந்தைகளால் அவர்களுக்குரிய பொருளை வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களை தொடக்கூட அனுமதிப்பதில்லை. எனவே இந்த பகிர்தல் பழக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
* சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் பொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதர்களாக இருப்பார்கள்.
* தற்போதுள்ள குழந்தைகளுக்கு பிட்சா, பர்கர் போன்றவை தான் பிடிக்கிறது. ஆனால் அதனை சிறுவயதிலேயே வாங்கிக் கொடுத்து பழக்கிவிட்டால், பின் அவர்கள் அதற்கு அடிமையாகி, பிற்காலத்தில் ஆரோக்கியமற்ற உடலைப் பெற்றிருப்பார்கள். ஆகவே அவர்களுக்கு ஆரோக்கிய உணவுகளை வீட்டிலேயே சமைத்துக் கொடுத்து, வீட்டு உணவின் சுவைக்கு பழக்கப்படுத்த வேண்டும்.
* குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.
* பொது இடங்களில் அதுவும் நடக்கும் பாதைகளில் குப்பையைப் போடும் பொழுது கண்டித்து, அதனை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இதனால் சிறு வயதிலேயே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக மாற்றலாம். மேலும் இந்த செயலை மற்றவர்கள் பார்க்கும் பொழுது, பெற்றோரின் வளர்ப்பை அனைவரும் பாராட்டுவார்கள்.
* சற்று பெரிய குழந்தைகளாக இருந்தால், நீங்கள் வீட்டு வேலை செய்யும் போது, அவர்களை உடன் அழைத்து சிறு சிறு வேலைகளை செய்யுமாறு சொல்லலாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.