பிரதமர் முன்னிலையில்
கண்ணீர் விட்ட
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
இந்தியாவில் சம்பவம்
நீதிபதிகள் நியமனத்தில் இந்திய மத்திய அரசு அலட்சியமாக
நடந்து கொள்வதாக அந்நாட்டு உச்ச நீதிமன்ற
தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
போதிய நீதிபதிகள் இல்லாததால் சாமானிய மக்களுக்கு நீதி
கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது; நீதிபதிகளின் சுமையைக் குறைத்து நீதித்துறையைக் காப்பாற்றுங்கள் என்றும் அவர்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், கண்ணீர் சிந்தியதால் அவ்விட்த்தில் பரபரப்பு
ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பேசிய இந்தியப் பிரதமர் மோடி, இந்தப் பிரச்னை
தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இந்திய மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும்
மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உச்ச
நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
டி.எஸ்.தாக்குர் பேசியதாவது:
10 லட்சம் பேருக்கு 10 நீதிபதிகள் என்று இருப்பதை 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்று அதிகரிக்க வேண்டுமென்று 1987-ஆம் ஆண்டிலேயே சட்ட ஆணையம் பரிந்துரைத்தது.
ஆனால் அது தொடர்பாக இப்போது வரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்போது 21 ஆயிரம் நீதிபதிகள் உள்ளனர். இதனை 40 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஆனால் இதற்கான நியமனங்களை
மேற்கொள்ளாததால் நீதித்துறைக்கு பெருமளவில் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு
நீதித்துறையின் சுமையை அதிகரிக்கக் கூடாது.
போதிய நீதிபதிகள் இல்லாததால் விசாரணைக் கைதிகளாக பலர்
சிறையில் வாடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 5 கோடி வழக்குகள் புதிதாகப் பதிவு
செய்யப்படுகின்றன. இப்போதுள்ள நீதிபதிகள் முழுமுனைப்புடன் பணியாற்றுவதன் மூலம்
இவற்றில் 2 கோடி வழக்குகளை
மட்டுமே தீர்த்து வைக்க முடிகிறது. மீதமுள்ள வழக்குகள் தேங்குகின்றன. நீதிபதிகள்
நியமன விஷயத்திலும், உள்கட்டமைப்பு
வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும் மத்திய அரசும், மாநில அரசுகளும் பரஸ்பரம் குறை
கூறிக்கொள்கின்றன. அவை நடவடிக்கைகள் ஏதும் எடுப்பதில்லை.
இப்போது நமது நாடு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார
சக்தியாக உள்ளது. அன்னிய முதலீட்டை நாம் பெருமளவில் வரவேற்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்காக
பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆனால், நமது நீதித்துறையின் நிலை மிகவும் கவலையளிக்கும் விதமாக
உள்ளது. வழக்குகள் மலைபோலக் குவிந்து வருகின்றன. நீதித்துறை சிறப்பாக
செயல்படுவதும் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ள
வேண்டும். மற்ற நாடுகளில் இருப்பதைவிட நமது நாட்டில் நீதிபதிகள் அதிகமாக
உழைக்கிறார்கள். நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம். நீதித்துறையின் மீது அதிக
சுமையை ஏற்றாதீர்கள் என்று பேசியுள்ளார் நீதிபதி டி.எஸ்.தாக்குர்.
இந்தப் பேச்சின்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அவர்,
கண்ணீர் மல்க காட்சியளித்தார்.
பிரதமர் முன்னிலையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கண்ணீர் சிந்தியதால்
நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
0 comments:
Post a Comment