புதிய அரசமைப்பையும் அதிகாரப் பகிர்வையும்

அர்த்தமுடையதாக்க சிறுபான்மை தலைமைத்துவங்கள்

 ஒன்றிணைந்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்:

 அமைச்சர் ஹக்கீம்

புதிய அரசமைப்பையும் அதனூடாக வரப்போகும் அதிகாரப் பகிர்வையும் அர்த்தமுடையதாக்க - அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆக்குவதற்கு அரசமைப்பு உருவாக்கத்தின் முயற்சிக்கு தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு முழுமையான ஆதரவை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம். என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்த அரசமைப்பு திருத்தம் தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இக்கருத்தைத் தெரிவித்தார்.
போயா விடுமுறையான இன்றைய தினம் நடைபெற்ற இச் செயலமர்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர் பீட உறுப்பினர்கள் ஆகியோர் மட்டுமல்லாது, அழைப்பின் பேரில் புத்திஜீவிகள் சிலரும், சமூக ஆர்வலர்களும் பங்குபற்றி கருத்துக்களை முன்வைத்தனர்.
இங்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்;
அப்போது முதல் இப்போது வரை நாம் அரசமைப்புத் திருந்தங்கள் தொடர்பில் பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றோம்.பல சர்வ கட்சி கூட்டங்களிலும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்களிலும் நாம் பங்கேற்று மிகவும் காத்திரமான பணியை வகுத்திருக்கின்றோம்.
அந்த வரிசையில்தான் இப்போது உருவாக்கப்படப் போகின்ற புதிய அரசமைப்புக்கும் நாம் காத்திரமான பங்களிப்பை வழங்கவுள்ளோம்.அது தொடர்பில் எமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகப் பேசுவதற்குத்தான் நாம் இந்த செயலமர்வைக் கூட்டியுள்ளோம்.
புதிய அரசமைப்பு அதனூடாக வரப்போகும் அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். அதை அர்த்தமுடையதாக ஆக்குவதற்கு தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு முழுமையான ஆதரவை வளங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்.
சிறுபான்மை சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் என்ற அடிப்படையில் அனைத்து தலைமைகளும் ஒன்றிணைந்த நிலைப்பாடு என்பது மிகவும் முக்கியமானது ஆகும். இது தொடர்பில் தீவிரமாக சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.
தேசிய அரசாங்கம் என்று தெரிவிக்கப்படுகின்றபோதிலும் அதில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளும் தங்களை தனித்துவக்கட்சியாக ஆட்சியமைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலேயே செயற்பட்டு வருகின்றது.
அதுதொடர்பில் இரண்டு கட்சிகளும் போட்டிபோட்டு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது.
விடுதலைப்புலிகளின் போராட்டமும் சமாந்தரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில் தீர்வு தொடர்பில் குழறுபடிகளும் குழப்பங்களும் தோற்றம்பெற்றது.
2002ஆம் ஆண்டு தொடக்கம் ஐ.தே.க.கட்சி அரசாங்கத்தில் அங்கமாக இருந்தபோது மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் மற்றும் இடைக்கால நிர்வாகம் தொடர்பான பரிந்துரைகளில் ஈடுபட்டிருந்த காலத்தில் முஸ்லிம்களின் தனித்தரப்பாக நாங்கள் விடுதலைப்புலிகளுடன்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம்.
இதனை எமக்கு எதிரான கட்சிகள் ஊடகங்களில் பயன்படுத்திக் கொண்டாலும் இந்த நாட்டில் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்கும்போது நாங்கள் எடுத்த நடவடிக்கைகளை பட்டியல்படுத்த முடியும்.
தமிழர்களின் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகளும் பங்குகொண்டு ஒரு அரசியல் யாப்பு சீர்திருத்தம் ஏற்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள ஒரு காலகட்டமாகும்.
1986ஆம் ஆண்டு இருநாடு ஒரு மொழி,இருமொழி ஒரு நாடு என்று துனிந்து கூறிய கொல்வின் ஆர்.டி.சில்வா உட்பட அன்றைய ஆட்சியாளர்கள் செய்த அநீயாயம் பெரும் ஒரு ஆயுதப்போராட்டமாக வெடித்து மிகப்பெரும் இழப்புகளை சந்தித்தது.
இறுதியில் 2009ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்து இன்று இந்த நாட்டில் சர்வதேசம் அரசியல் தீர்வில் ஒரு பங்காளியாக வருவதற்கான பொறுப்புகளை நாங்கள் ஒவ்வொருவரும் கூறவேண்டிய கடமையில் உள்ளோம்.
இந்த காலகட்டம் மிகவும் முக்கியத்துவமானதாகும். சிறுபான்மை சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் என்ற அடிப்படையில் அனைத்து தலைமைகளும் ஒன்றிணைந்த நிலைப்பாடு என்பது மிகவும் முக்கியமானது ஆகும். இது தொடர்பில் தீவிரமாக சிந்திக்கவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் என்றார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையிலிருந்து வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற மீயுயர் தன்மையை மீளமைத்தல்எண்ணிக்கையில் சிறிய சமூகங்களின் அரசியல் நோக்கு என்ற தலைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் இங்கு உரையாற்றினார்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top