வட மாகாண சபை முன்மொழிவு;
சிறிதாக ஒரு நாடி பிடிப்பு
=============================
[எம்..முபாறக் ]


இந்த 2016 ஆம் ஆண்டை புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான-அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான ஓர் ஆண்டு என்றே சொல்ல வேண்டியுள்ளது.அதற்கான நகர்வுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதைக் காணலாம்.
தமிழர்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட அதிகமான பிரச்சினைகளுக்கு இந்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்பட்டு விடும் என்ற பிரதமர் ரணில் விக்ரசிங்கவின் வாக்குறுதிக்கு அமையவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அரச தரப்பு தெரிவிக்கின்றது.
இந்த நாட்டு மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே புதிய அரசமைப்பும் அதற்குள் உள்வாங்கப்படவுள்ள தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் அமைய வேண்டும் என்று இந்த அரசு விரும்புவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.அதற்கு ஏற்பவே மக்களின் கருத்துக்கள் திரட்டப்படுகின்றன.
அரசமைப்பு உருவாக்கம் மற்றும் அரசியல் தீர்வு தயாரிப்பு என்ற அரசின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே தமிழர்களும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளும் உசாராகிவிட்டனர்.இவை தொடர்பிலான கணிசமான ஆலோசனைகள் தமிழர் தரப்பால் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளன.அடுத்த கட்டமாக வட மாகாண சபை ஒரு படி மேலே சென்று அரசியல் தீர்வு முன்மொழிவையும் வெளியிட்டுள்ளது.
மிழ் தேசிய கூட்டமைப்பு இது வரை காலமும் அவர்களது தீர்வு யோசனையை முன்வைக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரசிங்க குற்றஞ்சாட்டி சூடு தணிவதற்குள் இந்தத் தீர்வு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால்,இது இப்போது தெற்கில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.பேரினவாதிகளுக்கு-மஹிந்த தரப்பு அரசியல்வாதிகளுக்கு இது ஒரு துருப்புச் சீட்டாக மாறியுள்ளது.இதை வைத்துக்கொண்டு இவர்கள் தெற்கில் பேரினவாத அரசியலை முன்னெடுப்பதைக்  காணக்கூடியதாக உள்ளது.
அந்த முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டுள்ள மொழிரீதியான தனி மாநிலம்,மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கான தனியான அதிகார ஏற்பாடு போன்ற விடயங்களே இந்த அதிர்வுக்குக் காரணம்.
தமிழர்களுக்குத் தேவையானதைக் கேற்கும் உரிமை தமிழருக்கு உண்டு.மற்றைய இனங்களுக்கு என்ன வேண்டும் கூறும் உரிமை தமிழர்களுக்கு இல்லை.சம்பந்தப்பட்ட  தரப்பே அதைக் கோர வேண்டும் என்று தெரிவித்து ஒரு தரப்பினர் இந்த முன்மொழிவை எதிர்த்து வருகின்றனர்.
ஆனால்,மஹிந்த தரப்பினரோ இந்த முன்மொழிவானது நாட்டை இரண்டாகப் பிரிக்கும்-தனித் தமிழீழத்தை உருவாக்கும் அடிப்பதை ஏற்பாடாகும் எனக் குற்றஞ்சாட்டுகின்றது.
ஆனால்,இந்த முன்மொழிவு வடமாகாண சபையின் முன்மொழிவே அன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பினுடையது அல்ல.இருந்தாலும்,இந்த அரசு தாம் கேற்கும் தீர்வைத் தருமா என்று அறிவதற்காக கூட்டமைப்பினால் பின்னால் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனையாக-நாடித்துடிப்பாக இதைப் பார்க்கலாம்.
சிங்கள அரசியல்வாதிகள் அரசியல் லாபங்களுக்காக சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து ஆடக்கூடியவர்கள்.சிங்கள  மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக சிறுபான்மை இன மக்களுக்கு எதிராகச் செயற்படுவர்;அதேபோல்,சிறுபான்மை இன மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக சிறுபான்மை இன மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்களாகக் காட்டிக்கொள்வர்.அவ்வாறுதான் தமிழருக்கான  இந்த அரசியல் தீர்வு விவகாரத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.
தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படும் என்று இந்த அரசு கூறி வருகின்றபோதிலும்,தமிழர் கேற்கும் அனைத்தையும் வழங்குவதற்கு இந்த அரசு முன்வராது என்பது நிச்சயம்.நியாயமாக இருந்தாலும்,சிங்கள மக்கள் எதிர்ப்பார்களேயானால் அதைத் தமிழருக்கு வழங்குவதில் இருந்து அரசு விலகியே நிற்கும்.அனால்,தமிழர்கள் விடாப்பிடியாகவே நிற்பர்.
அந்த வகையில்,இந்த அரசு தாம் முன்வைக்கும் வரைபை முழுமையாக ஏற்றுக்கொள்ளுமா-இது தொடர்பில் சிங்கள மக்களின் நிலைப்பாடு என்ன என்று அறிவதற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஓர் ஏற்பாடே வட மாகாண சபையின் இந்த முன்மொழிவு என்று சொல்லலாம்.இதன் மூலம் கூட்டமைப்பு பல விடயங்களை விளங்கி இருக்கும்.
இருந்தும்,வட மாகாண சபையின் இந்த முன்மொழிவை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்கிறதா அல்லது அது தனியாக வரைபு ஒன்றைத் தயாரித்து வெளியிடுமா என்று இப்போது எல்லோரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.வட மாகாண சபையின் இந்த முன்மொழிவு தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அறிவதற்கும் தமிழர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த முன்மொழிவை அடிப்படையாக வைத்து தெற்கில் இப்போது மஹிந்த தரப்பினர் முன்னெடுத்து வரும் இனவாதப் பிரசாரங்களை முறியடிப்பதன் மூலம்தான் அரசியல் தீர்வை சாத்தியமாக்க முடியும்.அதற்கு ஏற்ப காய் நகர்த்த வேண்டிய கட்டாயம் இப்போது கூட்டமைப்பின் மீது சுமத்தப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top