சாய்ந்தமருது சகோதரர்
சபீக் (ஒடாவி) மகன் மரணம்.
மருத்துவத் துறையில் உள்ள நியதிகள் மீறப்படுகிறபோது
நீதியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு சட்டத்தில் இருக்கிறது!
எனது பக்கத்து வீட்டுச் சகோதரியின் மகன்; மிகுந்த சுட்டிப் பையன். நான் அறிய, என் கண் முன்னே ஓடித் திரிந்தவன். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இருப்பான். அவனும், அவனது சகோதரிகளும் சேர்ந்து விட்டால் போதும், தெருவெங்கும் கொண்டாட்டம் தான். அவனோடு நான் அதிகம் பேசியதில்லை; ஆனால் அவனது இழப்பு என்னை மட்டுமல்ல, எனது சுற்றத்தார் அனைவருக்கும் ஒரு பேரதிர்ச்சி தான். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
மரணம் இறைவனின் நாட்டப்படிதான் நடந்தேறுகிறது; இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால், அந்த மரணத்திற்கு இயற்கை அல்லாமல், மனிதர்கள் காரணியாகிற போது தான், பெரும் வேதனையும், ஆத்திரமும் எமக்கு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக, உயிரைக் காக்க வேண்டிய கடப்பாடுடைய மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களின் கவனயீனமும், தவறுகளுமே, ஒரு உயிரிழப்பிற்குக் காரணியாய் அமைந்து விடுகிறது என நாம் கேள்விப்படுகிற போது, அது ஒட்டு மொத்த மருத்துவத் துறைக்குமே அபகீர்த்தியை ஏற்படுத்தி விடுகிறது.
இந்தச் சிறுவனின் மரணம் குறித்து, அதிகாலையிலேயே நிறையப் பதிவுகளைக் காணக்கிடைத்தது. எல்லாமே ஒரு குறித்த வைத்தியசாலை குறித்தும், அதன் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்தும், குறை சொல்வதாயே அமைந்திருப்பது என்னைப் பொறுத்தவரை கவலையான விடயம். பதிவுகளை இடமுன்னர் நாம் விடயம் குறித்து, இரு தரப்பிலும் ஆராய்வதே முறையானது. அப்படி ஆராயும் வாய்ப்புக் கிடைக்காத போது, எமது பதிவுகளை நடுநிலையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பதிவினை நான், எனது அயல் வீட்டுச் சிறுவன் மரணித்தான் என்பதற்காக, ஒட்டு மொத்த மருத்துவத் துறையையும் தாக்கிப் பேசும் நோக்கத்திலோ அல்லது மரணத்திற்குக் காரணியாய் அமைந்தது நான் தொடர்புபடும் துறை என்பதற்காக, ஒட்டு மொத்த மருத்துவத் துறையையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலோ இடவில்லை. மாறாகக் கடந்த காலங்களில், குறித்த வைத்தியசாலையிலிருந்து எமது சமுகம் பெற்றிருக்கிற அனுபவங்களையும், அந்த அனுபவங்களின் பின்னணியில் கூட இன்னும் படிப்பினை பெற்றிராத ஒரு சூழ்நிலை நிலவுகிறதையும் கருத்தில் கொண்டு தான் இந்தப் பதிவினை இட வேண்டிய தேவையை நான் உணர்ந்தேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, எமக்குள் குடிகொண்டிருக்கிற மனிதாபிமானத்தையும், மனிதத் தன்மையையும் சற்றுப் புடம் போட்டுப் பார்க்க வேண்டிய தேவையும் எமக்கிருக்கிறது.
நேற்றைக்கு முதல் நாள், ஒரு புதிய இலக்கத்திலிருந்து எனக்கு அழைப்பொன்று வந்தது. மறுபக்கம் எனது அயல் வீட்டுச் சகோதரி; பெயரைச் சொன்னதுமே, சொல்ல வந்த விடயத்தோடு சேர்த்து, அந்தச் சகோதரியின் கடந்த காலச் சம்பவமொன்றும் என் நினைவுகளில் சுழன்று கொண்டிருந்தது.
அந்தச் சகோதரி சில மாதங்களுக்கு முன்னர், குறித்த ஒரு வைத்தியசாலையில் குழந்தைப் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு, பிரசவ வேளையில் குழந்தைக்கு ஏற்பட்ட கிருமித் தொற்றுக் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவசரமாக இடமாற்றப்பட்டிருந்தார். அவ்வேளை இதேபோன்று எனக்கு வந்ததொரு அழைப்புக் காரணமாக, நான் அவரைச் சென்று பார்த்தும், என்னாலான உதவிகளைச் செய்துமிருந்தேன்.
ஒரு மருத்துவ மாணவனாய் என்னால் செய்ய முடியுமான உதவி, வைத்தியர்களோடு பேசி, நிலைமை என்ன என்று பெற்றோரிடம் சொல்வது தான். இறுதியில் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முடியாது போனது. அப்போது அந்தச் சகோதரியும், அவரது குடும்பத்தாரும் அனுபவித்த துயரத்தில் எனக்கும் பங்கு கொள்ள நேர்ந்தது.
அந்தச் சிசுவின் இறப்பில் குறித்த வைத்தியசாலையின் பங்கு குறித்து அந்தக் காலங்களில் பேசப்பட்டிருந்த போதும், பெற்றோரின் தயவினால் அந்த விடயம் புதைக்கப்பட்டது. இந் நிலையில், தனது சகோதரியின் மகன், குறித்த அதே வைத்தியசாலையில் காய்ச்சல் என்று அனுமதிக்கப்பட்டதாயும், மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்ற நிலையில், சிறுவனுக்கு நோய் தீவிரமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவசரமாய் இடமாற்றப்பட்டிருப்பதாயும், அங்கு சிறுவனுக்கு டெங்கு நோய் ஏற்பட்டிருக்கிறது எனச் சொல்லப் பட்டிருப்பதாயும் கூறினார்.
அத்தோடு இரத்த வாந்தி மற்றும் வாந்தி பேதி என்பன ஏற்பட்டு, சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாயும் கூற, நிலைமையைப் புரிந்து கொண்ட எனக்கு ஒரு புறம் அதிர்ச்சியாயும், மறுபுறம் கடந்த காலங்களில் புதைக்கப்பட்ட, குறித்த வைத்தியசாலையோடு தொடர்பான இன்னும் சில சம்பவங்களும் என் நினைவிற்கு வந்தன.
டெங்குவினால் பல சிறார்களின் மரணங்கள், அக் குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்டமை குறித்து நான் கேள்வியுற்றிருக்கிறேன். அதிலும் குறிப்பாகச் சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மருத்துவரின் பிள்ளை கூட மரணித்த சம்பவம் இவ்வைத்தியசாலையின் வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது. கவனக்குறைவு தான் இம்மரணங்களுக்கெல்லாம் காரணம் என்று உரிய காலங்களில் பேசப்பட்டாலும், பல கட்டுரைகள் வரையப்பட்டாலும் அவையெல்லாம் புதைந்து தான் போயிருக்கின்றன. எனக்கும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பயிற்சி எடுத்த அனுபவங்கள் உண்டு. அங்கு டெங்குவினால் ஒரு பிள்ளை மரணிப்பதைக் கூட, நான் அரிதாகவே கண்டிருக்கிறேன். அப்படி மரணிக்கும் நிலைக்கு ஒரு பிள்ளை ஆளானாலும், முழு வைத்தியசாலையும் பதறித் திரியும் நிலையைத் தான் நான் கண்டிருக்கிறேன்.
ஆனால் மேற் குறித்த வைத்தியசாலையில் மாத்திரம் ஏன் இந்த நிலை, ஏன் இந்தக் கவனக் குறைவு என்றெல்லாம் சிந்தனையில் ஓடிக் கொண்டிருக்க, அழைப்பிலிருந்த சகோதரியிடம் பேச வேண்டியிருந்தது. “நான் தற்பொழுது மட்டக்களப்பில் இல்லை, வந்து பார்க்க முடியாத நிலையிலிருக்கிறேன். முடிந்தால் அங்கிருக்கும், எனக்குத் தெரிந்த வைத்தியர்களைத் தொடர்பு கொண்டு நிலைமையை விசாரித்துப் பார்க்கிறேன்.
ஆனால் குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்களை அறிந்திருந்தும், நீங்கள் சிறுவனை அங்கு அனுமதித்தது ஏன்? கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருக்கலாமே!” என்று கேட்டேன். சரியாய்ப் பதிலளிக்க முடியாத அந்தச் சகோதரி, ஒன்றும் நடக்காது தானே? என்று கவலை தோய்ந்த தொனியில் கேட்டார்.
என்னால் அதற்குச் சரியான பதிலைக் கூற முடியவில்லை; எனவே, “என்னால் எதையும் சொல்ல முடியாது” என்றேன். எனது இலக்கத்தைச் சகோதரியிடம் கொடுப்பதாகவும், அவர் எனக்கு அழைப்பை மேற்கொள்வார் என்றும் கூறி தொடர்பு துண்டிக்கப்பபட்டது.
அதன் பின்னர், டெங்கு நோய் தொடர்பான ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவொன்றை இன்ஷா அல்லாஹ், நாளை காலை முகப்புத்தகத்தில் இட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த போது, நேற்றிரவு இரண்டாவது தடவையாக எனது தாய் எனக்கு அழைப்பை மேற் கொண்டார்.
மாலை வேளையில், ஒரு முறைதான் எனது தாயோடு பேசுவது வழக்கம். இரண்டாவது தடவை அழைப்பென்றால் ஏதும் விஷேட செய்தியாகத் தானிருக்கும். அதிலும் ஏற்கனவே அழைப்பில், தாயிடம் பக்கத்து வீட்டுச் சிறுவன் குறித்துக் கேட்டிருந்தேன். ஒன்றும் சரியாகத் தெரியவில்லை என்ற பதில் தான் கிடைத்தது. இம்முறை அழைப்பு அது குறித்துத் தான் இருக்குமென்று எண்ணியது போன்றே, அச் சிறுவனின் மரணச் செய்தியே எனக்குக் கிடைத்தது. அப்போதே காலையில் இது குறித்துத் தான் பதிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.
மேலைத்தேய நாடுகளில், மருத்துவர்களதும் மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களதும் கவனக் குறைவும், தவறுகளும் அவர்களை நீதிமன்றங்களில் நிறுத்தி, பணி நீக்கம் வரை கொண்டு செல்கிற முறைமை இருக்கிறது. ஆனால் தென்னாசிய நாடுகளில், எமது மக்களின் மேம்பட்ட மனதுகளாலும், மனிதத் தன்மையாலும் பலர் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதனைச் சிலர் தமக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டு, தொடர்ந்தும் அதே தவறுகளைச் செய்து கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. இதற்குச் சரியான நியாயம் கிடைக்க வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் இடம்பெறாது எமது சமுகத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
மருத்துவத் துறையில் சில நியதிகள் உள்ளன. அவை மீறப்படுகிற போது, எம்மால் அதற்குரிய நீதியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு சட்டத்தில் இருக்கிறது. நோயாளிகளைத் திட்ட முடியாது; சிகிச்சை அளிக்கா விடினும், உயிராபத்தை ஏற்படுத்த முடியாது; தவறான சிகிச்சையை அளிக்க முடியாது; கவனக் குறைவாயிருக்க முடியாது. இவையெல்லாம் தண்டனைக்குரிய குற்றங்கள். தவறுதலாக அல்லது மறதியின் காரணமாகக் கூட நோயாளிகளின் உயிரில் விளையாட முடியாது; அதனால் தான் மருத்துவ மாணவர்களாகிய நாம் பயிற்சிக் காலங்களில் கசக்கிப் பிழியப்படுகிறோம்.
அதற்காக, எல்லாப் பிரச்சினைகளின் போதும், மருத்துவத் துறையினர் பக்கமே தவறிருப்பதாக நாம் ஆவேசப்பட்டுப் பேசுவதும் ஆரோக்கியமானதல்ல. நோயாளிகள் பக்கமுள்ள தவறுகள் மற்றும் கவனயீனம் குறித்தும் நாம் ஏறெடுத்துப் பார்க்க வேண்டும்.
மருத்துவர்களின் போதிய கவனிப்பைத் தாண்டியும், சில அரிதான சந்தர்ப்பங்களிலும், இந்ந நோய் நிலைமை என்ன என்று கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலைகளிலும் இறப்புகள் நிகழ்வதுண்டு. அதற்காக இப்பிரச்சினையை இப்படியே விட்டு விடவும் முடியாது.
இந்தச் சிறுவனின் அகால மரணம் குறித்தும், அதற்குக் காரணமான குறித்த வைத்தியசாலையின் பணியாளர்கள் குறித்தும் பந்தி பந்தியாகக் கட்டுரை எழுதுவதற்கும் மேலாக, இதற்கான நிரந்தரத் தீர்வொன்றைப் பெறுவதற்கு, எமது சமுகம் முன்வர வேண்டும் என்பதே எனது அவா!
குறித்த வைத்தியசாலையில் மாத்திரம் இச்சம்பவங்கள் அதிகம் இட்மபெறுவதற்கு, வேறு சில காரணிகளும் இருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. குறித்த வைத்தியசாலையின் ஆத்மா என்றும், அதனை மீளக் கட்டுவோம் என்றும் புரட்சி செய்து திரிபவர்கள், இந்தக் காரணிகள் தொடர்பில் ஆராய வேண்டும், இவை மேலும் இடம்பெறாது தடுக்க வேண்டும்.
அத்தோடு இச் சம்பவங்களைப் படிப்பினையாகக் கொண்டு மருத்துவத் துறையில் உள்ள ஏனையவர்களும், தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவையே எனது இப்பதிவின் நோக்கமாகும். தவிர யாரையும் குறை கூறுவதோ, இவர்களில் தான் நியாயம் இருக்கிறது எனக் கூறுவதோ நோக்கமல்ல.
-
டாக்டர் தில்சான்-
0 comments:
Post a Comment