எனது தந்தையை இந்திய இராணுவத்தினர்
இதே காணியில் வைத்தே அடித்துக் கொன்றனர்
அந்த இடத்தையே கைப்பற்றி எம்மை அகதிகளாக்கியுள்ளனர்
இளம் பெண்ணின் சோகக் கதை
என் தந்தையை இந்திய இராணுவத்தினர் இந்தக் காணியில் வைத்தே அடித்துக் கொன்றனர். அந்தத் துயரம் மறைவதற்குள் இப்பொழுது இலங்கை இராணுவத்தினர் எமது இடத்தைக் கைப்பற்றி எம்மை அகதிகளாக்கியுள்ளனர் என மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு நாவலடிச் சந்தியில் தமது வீடு, காணி என்பனவற்றை இழந்துள்ள காசிம்பாவா பர்ஸானா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொழும்பு, மட்டக்களப்பு. திருகோணமலைச் சந்தி நாவலடியில் படையினர் நிலைகொண்டுள்ள தமது குடியிருப்புக் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி அப்பகுதி காணியை இழந்த 16 முஸ்லிம் குடும்பளில் இந்த இளம் பெண்ணும் ஒருவர்.
இக்குடும்பங்கள் நேற்று நாவலடி படை முகாமுக்கு முன்னால் கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஓரமாக கூடாரமிட்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பர்ஸானா தொடர்ந்து தெரிவிக்கையில்; எனது பெற்றோரும் நானும் இப்பொழுது படையினர் ஆக்கிரமித்துள்ள காணிக்குள்தான் வாழ்ந்து வந்தோம்.
நான் பிறந்து வளர்ந்ததே இந்தக் காணியில்தான். நான் சிறுவயதாக இருக்கும்போது இங்கு யுத்தத்தில் ஈடுபட்ட இந்திய அமைதி காக்கும் படையினர் எனது தந்தையை அடித்தே கொன்றுவிட்டார்கள்.
அந்தத் துயரத்திலிரந்து நாம் இன்னமும் மீளவில்லை. அவ்வாறிருக்கும்போது இலங்கைப் படையினர் இந்த இடத்தில் வந்து இங்கு குடியிருந்தவர்களையெல்லாம் துரத்தியடித்து விட்டு இப்பொழுது முகாமிட்டுள்ளாரகள்.
இப்பொழுது எனது தாயும் மரணித்து விட்ட நிலையில் நான் அநாதரவாக வீடுமின்றி காணியுமின்றி இருப்பிடமில்லாது அகதியாக வாழ்ந்து வருகின்றேன்.
எமது துயரத்தை எங்கு போய் எடுத்துச் சொன்னாலும் அதனை அக்கறையோடு யாரும் கேட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. எனது பெற்றோர் யுத்தத்தில் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகிய நிலையிலேயே எங்களைப் பராமரித்தார்கள். நாங்கள் வாழ்ந்த இடம் எப்படியாயினும் எங்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இங்கிருந்து
1990 ஆம் ஆண்டு யுத்தத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்ட மக்கள் தாங்கள் ‘1968ஆம் ஆண்டு முதல் மேற்படி பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் அங்கு வாழ்ந்தமைக்கான அனைத்து ஆவணங்களையும் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment