"நேஷனல் ஜியாகிராஃபிக்' உலகப் புகழ் ஆப்கன் பெண்ணுக்கு

பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

போலியான ஆவணங்களைக் காட்டி பாகிஸ்தான் குடியுரிமை அடையாள அட்டை பெற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ள, "நேஷனல் ஜியாகிராஃபிக்' புகழ் ஆப்கன் அகதி சர்பத் குலாவுக்கு ஜாமீன் வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது.
அமெரிக்காவின் "நேஷனல் ஜியாகிராஃபிக்' மாத இதழின் புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் மெக்குரி, பாகிஸ்தானின் நிஸார்பாக் பகுதியில் அமைந்துள்ள ஆப்கன் அகதிகளுக்கான முகாமில் சர்பத் குலா என்ற 12 வயதுப் பெண்ணை 1984-ஆம் ஆண்டு புகைப்படம் எடுத்தார்.
அந்தப் புகைப்படம், அந்த மாத இதழின் முகப்புப் பக்கத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் புகழ் பெற்றது. புகைப்படத்திலிருந்த சர்பத் குலாவை "ஆப்கன் போரின் மோனாலிசா' என்று பலர் வருணித்தனர்.
தற்போது 46 வயதாகும் சர்பத் குலா, பாகிஸ்தானின் அடையாள அட்டை வழங்கும் அதிகாரிகளிடம் போலியான தகவல்களையும், ஆவணங்களையும் அளித்து, தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பாகிஸ்தான் குடியுரிமை அடையாள அட்டையைப் பெற்றுள்ளதாக அவரை பொலிஸார் கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி  புதன்கிழமை கைது செய்தனர்.
இந்த நிலையில், ஜாமீன் கோரி அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
சர்பத் குலா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, மனிதாபிமான அடிப்படையில் சர்பத் குலா விடுவிக்கப்படலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் செளத்ரி நிஸார் அலி கான் கடந்த மாதம் 30-ஆம் திகதி கூறிய நிலையில், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top