இலங்கையின் 69வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்

இலங்கையின் 69வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று ( 2017.02.04 ) முற்பகல் கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
தேசிய ஐக்கியம்என்பதே இவ்வருட தொனிப்பொருளாகும். வைபவ இடத்திற்கு வருகைத்தந்த ஜனாதிபதி அவர்கள், திருமதி. ஜயந்தி சிறிசேன ஆகியோரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோர் வரவேற்றனர். ஜனாதிபதி அவர்கள் தேசிய கொடி ஏற்றியதுடன் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாகின.
கொழும்பிலுள்ள 11 பாடசாலைகளைச் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் ஒன்றிணைந்து தேசிய கீதத்தை இசைத்ததுடன் பாதுகாப்பு பிரிவினரின் மரியாதை அணிவகுப்பும், இராணுவத்தினரின் கண்காட்சியும் சுதந்திர தின வைபவங்களை வண்ணமயமாக்கின.
தேசிய சுதந்திர தினத்திற்கான மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட நாம் இன்று பொருளாதார சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் ஒன்றிணைவோம் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள கல்விமான்கள், புத்திஜீவிகள், புதிய உற்பத்திகள், உற்பத்திச் செயலணியின் வினைத்திறன், விவசாயம் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களினதும் வலுவினை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என ஜனாதிபதி அவர்கள் அதன்போது தெரிவித்தார்.
இன்று (04) முற்பகல் கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற 69வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 ‘தேசிய ஐக்கியம்எனும் தொனிப்பொருளில் அபிமானம் மிக்க வகையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், 21ஆம் நூற்றாண்டில் நாட்;டில் பூரணமான ஜனநாயகத்தினை பாதுகாக்க வேண்டுமாயின் முதலில் நாம் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டும். இதன்போது இளைஞர்களுக்கே அரசாங்கம் முதலிடம் கொடுப்பதுடன் அறிவை மையப்படுத்திய கல்வி முறை, மற்றும் பொருளாதாரம் என்பவற்றுடன் புதிய உற்பத்தி பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் செயல்முறையின் உரிமையாளர்களும் பொறுப்பாளர்களும் எமது இளைஞர் சமூகமே எனத் தெரிவித்தார்.
21வது நூற்றாண்டிற்கு பொருத்தமான நவீன அரசாங்கம் என்ற வகையில் அரசியல் ஸ்திரத்தன்மையைப் போன்றே சமூக அபிவிருத்தியும் எமது உன்னதமான தாய் நாட்டை கட்டியெழுப்புவதற்கு மிக அவசியமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அந்த விடயங்களை அடைவதற்கு நாட்டில் இன நல்லிணக்கமும் சமயம் சார்ந்த நல்வாழ்வும் வலுவடைதல் அவசியம் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் இன நல்லிணக்கத்தையும், தேசிய ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற வகையில் பாரிய அர்ப்பணிப்புடனும், தீர்மானத்துடனும் செயற்படுத்தப்படும் திட்டங்கள் இன்று தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பாராட்டு பெற்றுள்ளன. எனினும் அவற்றிற்கு எதிராக செயற்படும் சில சந்தர்ப்பவாத சக்திகளும் உள்ளன. குறுகிய எண்ணங்களோடு செயற்படும் அந்த சந்தர்ப்பவாத சக்திகளை தாய் நாட்டிற்கு எதிரான சக்திகளாகவே தாம் கருதுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நாட்டைக் கட்டியெழுப்பி சுபீட்சமான பொருளாதாரத்தை ஏற்படுத்துகையில் சகல அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் மோசடி, ஊழல், வீண்விரயம் மற்றும் களவுகள் என்பவற்றை இல்லாதொழித்து நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுதல் அவசியமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது மேலும் தெரிவித்தார்.

பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் தூதுவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.






















0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top