கல்முனைப் பிரதேச ஆழ்கடல் மீனவர்களின்

குறைபாடுகள் நிறைவேறுமா?

அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேச ஆழ் கடல் மீனவர்களின் நீண்ட காலப் பிரதான கோரிக்கைகளில் ஒன்றான 'சாய்ந்தமருதில்  படகு தரிப்புத் துறை' இது வரையும் நிறைவேற்றப்படாத ஒரு கோரிக்கையாகவே இருந்து வருவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இது மட்டுமல்லாது இப்பிரதேச மீனவர்களின் வாக்குகளைப்             பெறும் நோக்காக காலத்திற்கு காலம் இங்குள்ள அரசியல்வாதிகளால் சாய்ந்தமருது படகு தரிப்புத் துறைத் திட்டத்தை தேர்தல் கால வாக்குறுதி வியாபாரமாகவும் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது எனவும் இப்பிரதேச மீனவர்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது
இப் படகு தரிப்புத் துறைத் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து அடிக்கல் நாட்டு வைபவங்கள் அடிக்கடி  நடந்தேறியுள்ளனவே தவிர மீனவர்களின் எதிர்பார்ப்பு இது வரை காலமும் நிறைவேற்றப் படாமல் வேலைகள் ஆரம்பிப்பதும் இடையில் கைவிடுவதும் என்ற நிலையில் இத் திட்டம் இருந்து கொண்டிருப்பதாக. மீனவர்கள் பெரு மூச்சுக்களுடன் தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டத்தில் கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஆகிய முஸ்லிம் பிரதேசங்களிலேயே பல நூற்றுக் கணக்கான இயந்திரப் படகுகள் மூலம் ஆழ் கடல் மீன் பிடித்தொழில் நடைபெற்று வருகின்றது.தொழில் செய்யும் காலத்தில் பெறுமதிமிக்க தமது இயந்திரப் படகுகளை எந்நேரமும் கடலிலேயே நங்கூரமிட்டு வைக்கும் பரிதாப நிலை இம்மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.கடல் கொந்தளிப்பு, இயற்கை அனர்த்தம் மற்றும் காலநிலை சீர்கேடு என்பன போன்றவற்றினால் தமது இயந்திரப் படகுகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையில் இப்பிரதேச மீனவர்கள் தமது தொழிலைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சாய்ந்தமருது மீனவர்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து, அவற்றிற்கு தீர்வு காணும் முகமாக கடந்த 2013.05.23 ஆம் திகதி வியாழக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் (தற்போதய பிரதி அமைச்சர்) தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அம்பாரை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடிச் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ஹமீட், உபதலைவர் ஏ.எம்.றஹீம் ஆகியோர் பின்வரும் தகவல்களையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்களிடம் எடுத்துக் கூறியிருந்தனர்.
முக்கியமாக இவ்வாறான பிரதேசங்களில் வசிக்கும் வறிய மீனவர்களின் மீன்பிடி வலைகள், வள்ளங்கள் என்பன போன்றவை தென்பகுதி மீனவர்களால் களவாடிச் செல்கின்றனர். இந்த பிரதேசத்தில் ஏறத்தாழ 16ஆயிரம் மீனவர்கள் இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அமைச்சரிடமும் பிரதி அமைச்சரிடமும் சுட்டிக்காட்டினர். சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் 35 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படவிருந்த நங்கூரமிடும் தளத்திற்கு என்ன நடந்தது என்பது இன்னமும் மர்மமாக இருப்பதாகவும் அவர்கள் அக்கூட்ட்த்தில் கேள்வியும் எழுப்பியிருந்தனர்.
அக்கலந்துரையாடல் இடம்பெற்று சுமார் 4 வருடங்களை எட்டியும் இதுவரை எந்தப் பலனும் மீனவர்களுக்கு கிடைக்கவில்லை எனவும் மீனவர்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
மீன் பிடித் தொழில் செய்ய முடியாத காலங்களில் படகு தரிப்புத் துறை வசதியுள்ள இடங்களுக்கு கூடுதலான பணத்தைச் செலவழித்து தமது படகுகளைக் கொண்டு செல்ல வேண்டிய அவல நிலையும் இவர்களுக்கு ஏற்படுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது                                                                
தேர்தல் காலத்தில் வேலைகள் ஆரம்பிக்கப்படுவதும் தேர்தல் முடிந்தவுடன் அப்படியே வேலைகள் கைவிடப்படுவதுமாக சாய்ந்தமருதில் அமைத்துத்தருவதாக அரசியல்வாதிகளினால் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட  படகுத் தரிப்புத் துறை அமைக்கும் வேலைகள் தற்போது இங்குள்ள மணல் மலை போல் குவிக்கப்பட்டும் மண் மூடைகள் அடுக்கப்பட்டும் படகுகளைக் கட்டும் குழாய்கள் பதிக்கப்பட்டும் அப்படியே இடை நிறுத்தப்பட்டிருக்கின்றன.

சாய்ந்தமருது படகு தரிப்புத் துறை வேலைத் திட்டம் நிறைவேறுவது எப்போது என்பதே இப்பிரதேச மீனவர்களின் கேள்விகளாக இருந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்,  திகாமடுல்ல மாவட்டத்தில் உள்ள பிரதி அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளும்தான் இவர்களின் கேள்விகளுக்கும், பெருமூச்சுக்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top