களுத்துறை விபத்து தொடர்பாக ஜனாதிபதி அனுதாபம்

விபத்தில் காயமடைந்தவர்களை

ஊடகத்துறை அமைச்சர் பார்வையிட்டார்

களுத்துறை கட்டுகுருந்தை கடல் பகுதியில் படகொன்று கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.
விபத்து ஏற்பட்டவுடனேயே குறித்த தரப்பினருடன் தொலைபேசி தொடர்புகளை ஏற்படுத்திய ஜனாதிபதி, விபத்துக்குள்ளானவர்களை மீட்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்படையினருக்கும் பொலிஸாருக்கும் ஆலோசனை வழங்கியதுடன், விபத்துக்குள்ளானவர்களுக்குத் தேவையான சிகிச்சை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
விபத்தில் மரணமடைந்தவர்களது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற சமய வைபவமொன்றில் பங்கேற்பதற்காக பேருவளையில் இருந்து சென்ற படகே இவ்வாறு விபத்திற்கு உள்ளானது. அதில் பயணித்தவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கஜந்த கருணாதிலக வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டதுடன் அவர்களது தேவைகளையும் கேட்டறிந்தார்.


.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top