மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப்பின் மரணம் தொடர்பான

அறிக்கையை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு

முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் கோரிக்கை



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக, புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட நீதியரசர் எல்.கே.ஜீ. வீரசேகர , தனி நபர் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் விண்ணப்பம் ஒன்றின் மூலம் கோரியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோனுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பியுள்ள மேற்படி விண்ணப்பத்தில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தனக்கு அப்பிரதியை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கமாக வெளியிடக் கோரி, பஷீர் சேகுதாவூத் இதற்கு முன்னரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆயினும், அக்கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாத நிலையிலேயே புதிதாக அமுலுக்கு வந்துள்ளதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், அவ்வறிக்கையின் பிரதி தனக்கு வழங்கப்பட வேண்டும் என, அவர் தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃப் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இச் சம்பவம், முஸ்லிம் சமூகத்துக்கும் , இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருந்தது.

அஷ்ரஃப்பின் மரணம் குறித்து புலனாய்வு செய்வதற்கும் , அதன் பின்னணியில் திட்டமிட்ட சதி அல்லது சட்ட விரோத செயற்பாடுகள் இருக்கின்றனவா எனக் கண்டறிவதற்கும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் 2001 ஆம் ஆண்டு தனி நபர் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதியரசர் எல்.கே.ஜி. வீரசேகராவின் தலைமையிலான அவ்வாணைக் குழு, புலனாய்வுகளை மேற்கொண்டது. புலனாய்வு நடவடிக்கைகளுக்காக அவ்வாணைக் குழுவுக்கு 03 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த நிலையில், அப்புலனாய்வு நடவடிக்கைகள்குறித்த கால வரையறைக்குள் நிறைவு செய்யப்பட்டு, அவர்களின் அறிக்கையும் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் கையளிக்கப்பட்டது.

அதற்குப் பின்னரான 16 வருட கால இடைவெளியில் இன்றுவரை ஆணைக்குழுவின்கண்டறிதல்கள்எதுவும் முழுமையாகவோ , சுருக்கமாகவோ பொது மக்களுக்கு வெளியிடப்படவில்லை.

இக்கால இடைவெளியில் சந்திரிகா குமாரதுங்க 05 வருட காலமும் , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 09 வருட காலமும் ஆட்சியில் இருந்தனர். அத்துடன் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரு வருடங்களுக்கு மேலாக அதிகாரத்தில் இருந்து கொண்டிருக்கிறார். இம்மூன்று ஜனாதிபதிகளும் , இந்த அறிக்கையை பகிரங்கப் படுத்துவதற்கான பிரயத்தனங்கள் எதனையும் மேற்கொள்ளாமைக்கான காரணங்கள் எவை எனத் தெரியாதுள்ளன.

மர்ஹும் அஷ்ரஃப் மீது அளவற்ற நன்மதிப்பும், மரியாதையும்கொண்டுள்ள பொதுமக்கள், அவரின் மரணத்தைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள தீவிரஆர்வமுடையவர்களாக உள்ளனர். இது உண்மையைக் கண்டறிவதில் அப்பொதுமக்களுக்கு உள்ள உரிமையாகும்.


ஆகையால் , 2017 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமையின் படி, மேற்குறிப்பிட்ட அறிக்கையின் பிரதியொன்றை நான் பெற்றுக் கொள்ளும் முகமாக, என்னுடைய இவ் விண்ணப்பத்தை தங்களுக்கு அனுப்புகிறேன். இவ்விடயம் தொடர்பாக ஏற்படும் சகல செலவுகளும் என்னால் ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top