2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேயை 155 ஓட்டங்களில் சுருட்டி, 30.1 ஓவருக்குள் பதிலடி கொடுத்துள்ளது இலங்கை. இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி காலேயில் இன்று 2 ஆம் திகதி தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணியின் மசகட்சா, மிர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கடந்த போட்டியில் சதம் அடித்த மிர் ஓட்டம் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து வந்த எர்வின் 22 ஓட்டங்களிலும், தொடக்க வீரர் மசகட்சா 41 ஓட்டங்களிலும், வில்லியம்ஸ் 13 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தார். அதன்பின் ஜிம்பாப்வே விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் விழுந்தது. கடைசி மூன்று விக்கெட்டுக்களையும் ஹாட்ரிக் மூலம் அறிமுக வீரர் வனிந்து ஹசரங்க வீழ்த்தி ஜிம்பாப்வே 33.4 ஓவர்கள் மட்டுமே சமாளித்து 155 ஓட்டங்களில் சுருண்டது. பின்னர் 156 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் டிக்வெல்ல, குணதிலக ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குணதிலக 8 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மெண்டிஸ் ஓட்டம் எதுவும் பெறாத நிலையிலும், தொடக்க வீரர் டிக்வெல்ல 35ஓட்டங்களிலும் வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உபுல் தரங்க - மேத்யூஸ் அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றனர். குறிப்பாக தரங்க சிறப்பாக விளையாட இலங்கை 30.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தரங்க 86 பந்தில் 75 ஓட்டங்களும், மேத்யூஸ் 35 பந்தில் 28 ஓட்டங்களும், எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 10 ஓவர்கள் வீசி நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சண்டகன் ஆட்டநாயகன் விருதை பெற்றார். காலியில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 317 ஓட்டங்களை விரட்டிப்பிடித்து ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது. தற்போது அந்த தோல்விக்கு இலங்கை அணி பழிதீர்த்துள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மூலம் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது போட்டி 6ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடக்கிறது. தனது கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் இன்று 2 ஆம் திகதி கலந்துகொண்ட வனிந்து ஹசரங்க உலக சாதனை படைத்துள்ளார். சிம்பாபே அணிக்கு எதிராக இன்று காலியில் நடைபெற்றுவரும் போட்டியில் மூன்று விக்கெட்டுக்களை தொடராக பெற்று ஹெட்ரிக் சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளார். தனது கன்னிப் போட்டியில் இவ்வாறு சாதனை நிலைநாட்டிய உலகில் மூன்றாவது வீரராக ஹசரங்க பதிவாகியுள்ளார். காலி ரிட்ச்மன் வித்தியாலயத்தில் கல்வி கற்ற 19 வயதான ஹசரங்க, மூன்றாம் வரிசை விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top