நாட்டின் பல பகுதிகளில் பகல் வேளைகளில் இடைக்கிடையே மின்வெட்டு அமுலாகுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளவை வருமாறு:-
"கடுமையான வறட்சியின் காரணமாக நீர் மின்சார உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. நுரைச்சோலை 'லக்விஜய' நிலக்கரி மின் நிலையம் கடந்த பத்து நாட்களாக பகுதியளவில் இயங்காததால் தேசிய மின் கட்டமைப்புக்கு 300 மெகாவோல்ட் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கிறது.
அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனியார் மின்னுற்பத்தி நிலையமான களனிதிஸ்ஸ 'சோஸிட்ஸ்' செயலிழந்திருப்பதால் அதன் 163 மெகாவோல்ட் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின் நிலையத்தின் பழுது பார்ப்பு வேலைகள் அடுத்த வார இறுதியிலேயே முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நீர்த்தேக்கங்களிலுள்ள நீர் விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதால் பகல் நேர நீர் மின்சார உற்பத்தி 36 சதவிகிதமாகக் குறைவடைந்துள்ளது.
இவ்வாறான பிரச்சினைகளால் மின் பாவனை அதிகமாகவுள்ள பகல் வேளைகளில் அவ்வப்போது மின்வெட்டை அமுல்படுத்த வேண்டியுள்ளது.
இரவு நேரங்களில் நீர்த்தேக்கங்களிலுள்ள நீர் விவசாயத் தேவைக்கு வழங்கப்படாததால் இரவு வேளைகளில் மின்வெட்டைச் செய்யாமல் சமாளிக்க முடியும்.
பகல் வேளைகளில் முன்னறிவித்தல்கள் எதுவுமின்றி அமுலாக்கப்படும் மின்வெட்டு குறைந்த பட்சம் இரண்டு மணித்தியாலங்களுக்கு நீடிக்கலாம். இது நாளொன்றுக்கு இரண்டு முறை நடக்கலாம்.
எனவே, சுயமாக மின்பிறப்பாக்கிகளை (ஜெனரேட்டர்) வைத்திருப்பவர்கள் இயன்ற வரை பகல் வேளைகளில் அவற்றைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
நுரைச்சோலை மற்றும் களனிதிஸ்ஸ மின் விநியோகங்கள் சீராகும் வரை இந்த மின்வெட்டு தவிர்க்க முடியாத ஒன்றாகும்'' என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.