சீனி கொள்கலனில் கடத்தப்பட்ட

கொக்கேய்ன் தொடர்பில்

மேலும் பல தகவல்கள் வெளியாகின


இரத்மலானை சதொச களஞ்சியசாலைக்கு கொண்டுவரப்பட்ட கொக்கேய்னுடனான சீனி கொள்கலனும் கடந்த வருடம் கொக்கேய்ன் கண்டுபிடிக்கப்பட்ட சீனி கொள்கலனும் ஒரே இறக்குமதியாளருடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில சம்பவங்களுடன் குறித்த இறக்குமதியாளர் தொடர்புபட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்தது.
பிரேசிலில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 218 கிலோ 600 கிராம் நிறை கொண்ட கொக்கேய்ன் கடந்த புதன்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பெறுமதி 320 கோடி ரூபாவாகும்.
ஒருகொடவத்தை சுங்க கொள்கலன் பிரிவில், சீனி கொள்கலனொன்றிற்குள் இருந்து, கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 220 கிலோகிராமுக்கும் அதிக கொக்கேய்ன் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரேசிலில் இருந்து போர்த்துக்கல் ஊடாக இந்த சீனி கொள்கலன் கொண்டுவரப்பட்டமை விசாரணைகளின் போது தெரியவந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து, சீனி கொள்கலன் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுங்கத் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டது.

அதன் பிரகாரம், 54 கொள்கலன்கள் சுங்கப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றை விடுவிப்பதற்கு முன்னர் முழுமையான சோதனையிடப்பட்டது.
எனினும், இரத்மலானை சதொச களஞ்சியசாலையில் கொக்கேய்ன் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன், சுங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளைப் பின்பற்றாது முறையாக சோதனையிடப்படாது விடுவிக்கப்பட்டுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
சமரகோன் நிறுவனம் இடைத்தரகர் ஒருவரிடம் இருந்து இந்த சீனியை பெற்றுக்கொண்டதாகப் பதிவாகியுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொக்கேய்னுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் சார்பில் விடயங்களை முன்வைத்த சட்டத்தரணிகள், இந்த இடைத்தரகர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top