ஜிப்ரி ஹனீபாவின் மறைவு
முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமன்றி
முழு சமூகத்திற்கும் பாரிய இழப்பு
அமைச்சர் ரிஷாட் அனுதாபம்.
திஹாரி அங்கவீனர் நிலையத்தின் ஸ்தாபகரும் பிரபல சமூக சேவையாளருமான ஜிப்ரி ஹனீபாவின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமின்றி அனைத்து சமூகங்களுக்கும் பாரிய இழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
சமூதாயத்தில் வலது குறைந்தோர் கவலையின்றியும், நிம்மதியுடனும் வாழும் வகையில், அவரது முயற்சியினால் திஹாரியில் உருவாக்கப்பட்ட அங்கவீன நிலையம் சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
அனைத்து சமூகத்திலுமுள்ள ஊனமுற்றவர்களுக்கும் இந்த நிலையத்தில் அனுமதி வழங்கப்பட்டு புனர்வாழ்வு அழிக்கப்பட்டது. அங்கவீனர்களுக்கு உதவியதன் மூலம் மர்ஹூம் ஜிப்ரி ஹனீபா தனது மனித நேயத்தையும், பண்பையும் வெளிப்படுத்தினார்.
1984 ஆம் ஆண்டு அன்னாரினால் உருவாக்கப்பட்ட அங்கவீனர் நிலையம் 33 வருடங்களை சமூகப் பணிகளில் நிறைவு செய்திருக்கின்றது.
பல்வேறு வகையான வலது குறைந்தோரின் திறமைகளையும் ஆற்றல்களையும் இந்த நிலையத்தின் மூலம் வெளிக்கொணர்வதற்கு ஜிப்ரி ஹனீபா ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.
பாடசாலைக் கல்வி, வெளிக்கள பயிற்சிகள், புனர் வாழ்வு, சுகாதார வசதிகள், உணவு ஆகியவற்றை இங்கு பயிலும் மாணவர்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜிப்ரி ஹனீபா அந்த உதவிகளை இடையறாது வழங்குவதிலும் காத்திரமான பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டவர்.
அங்கவீனம் ஒரு குறைபாடல்ல என்பதை இந்த நிலையத்தின் மூலம் சமூகத்திற்கு எடுத்துக்காட்டி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர்.
திஹாரி அங்கவீன நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்தும் உள்நாடுகளில் இருந்தும் பிரமுகர்களை வரவழைத்து இங்குள்ள பல்வேறு இடர்பாடுகளை எடுத்துக்கூறி நிறுவனத்தை தொடர்ந்து செவ்வனே நடத்துவதில் வெற்றி கண்டார்.
தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அங்கவீனரின் நலன்களுக்காக செலவிட்டுள்ளார்.
அன்னாரின் மறைவால் துயருறும் அங்கவீன சமூகத்திற்கும், அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதோடு அவரது ஈடேற்றத்திற்கு வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
- ஊடகப்பிரிவு-
0 comments:
Post a Comment