தமிழ் முஸ்லிம் ஐக்கியத்துக்காக அயராது உழைத்த கண்ணியவான் அரசியல்வாதியான அப்துல் றசாக் மன்சூரை நாம் இன்று இழந்து விட்டோம். தமிழ் முஸ்லிம் ஐக்கியத்துக்கும் இந்த நாட்டுக்கும் அர்ப்பணத்தோடு பணியாற்றிய அவர் 25ஆம் திகதி ஜுலை 2017இல் எம்மை விட்டுப் பிரிந்தார். சிறந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடைசித் தலைமுறையைச் சேர்ந்த அவரின் நல்லடக்கம் அவரது சொந்த ஊரான கல்முனையில் பெரும் திரளான மக்கள் முன்னிலையில் இடம்பெற்றது.
மன்சூர் பற்றி அவரின் அன்றைய வகுப்பறைத் தோழி திருமதி ராஜேஸ் கந்தையா மன்சூரை கௌரவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு நினைவு மலரில் இப்படிக் கூறுகின்றார்.
“நான் அவரை ஒரு அன்புக்குரிய நண்பனாக உரிமை கோரும் அதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மன்சூரை தமது சொந்த மண்ணின் மைந்தனாக உரிமை கோருகின்றனர். அவரை நான் அவரின் முதற் பெயர் கொண்டே அழைக்கலாம். பாடசாலை வாழ்வில் இருந்து பிரியும் வரை நாம் ஒன்றாகவே படித்தோம். ஆனால் அந்த நட்பின் பிணைப்பு இன்று வரை நீடிக்கின்றது. உயர் பாடசாலையிலாயினும் சரி அல்லது சட்டக் கல்லூரியிலாயினும் சரி ஒரு மாணவனாக இருந்த காலத்தில் கூட மன்சூர் விடாமுயற்சி உடையவராகவும் உயர் இலக்குகளை அடையும் ஆற்றல் கொண்டவராகவுமே காணப்பட்டார். மக்கள் நலன் அவர் மனதில் எப்போதும் காணப்பட்டது. ஏழைகளின் உயர்ச்சிக்காக அவர் அயராது உழைத்தார். அவர் இதை புகழுக்காக செய்யவில்லை. மாறாக சமூகத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அர்ப்பணத்தோடு அதில் ஈடுபட்டார்.
அதிக இலாபமீட்டித் தரும் வகையில் அவர் சட்டத்துறையில் பிரவேசித்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் அவர் அரசியலில் ஈடுபட்டார். இந்த முடிவிலும் கூட நாட்டுக்கும் தனது தொகுதி மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்ற அவரின் எண்ணத்தையே நாம் உணர முடிகின்றது. அவர் ஐ.தே.க. அரசில் வர்த்தக வாணிப துறை அமைச்சராக வெளிநாடுகளுடன் சாத்தியமான உறவுகளை ஸ்தாபித்தார். குவைத் மற்றும் பஹ்ரேன் நாடுகளுக்கான தூதுவராக அவர் சர்வதேசப் பங்காளிகளுடன் நல்லெண்ணத்தையும் சமாதானத்தையும் ஸ்தாபித்தார்.
மன்சூர் முழு அளவிலான ஒரு கனவான். அவர் நினைத்திருந்தால் ஒரு சட்டத்தரணியாக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, சமூக சேவகராக பணத்தை சம்பாதித்திருக்கலாம். ஆனால் அவரின் கரங்கள் சுத்தமானவை, அவரின் சாதாரண வாழ்க்கை செல்வத்தை வேண்டி நிற்கவில்லை. அவர் குறைந்தளவு வசதிகளோடு எளிமையாக வாழ்ந்தார். ஆனால் அவரின் உள்ளம் எப்போதுமே பெரியதாக இருந்தது. அதுதான் அவரை எல்லோரும் விரும்பும் ஒரு நபராகவும் மாற்றியது. அவரின் எளிமையும் பண்பும் அவர் பழகிய மக்களைக் கவர்ந்தது. அவரது மக்களுக்கு தொடர்ந்து சேவைபுரிய அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியத்தை அளிக்க பிரார்த்திக்கின்றேன்” என்று திருமதி.ராஜேஸ் தெரிவித்துள்ளார்.
மன்சூர் எப்போதும் இன நல்லிணக்கத்துக்காக பாடுபட்டவர். இன்று அவர் தீவிர அரசியலில் இல்லாவிட்டாலும் கூட அவரின் சிந்தனைகள் இன்றும் மக்கள் மனங்களில் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் நான் அவருடன் பேசுகின்ற போது அவர் கூறும் முக்கிய விடயம்
“கிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து தத்தமது நலன்களைப் பேணிக் கொண்டு இணக்கமாக வாழ வேண்டும். ஏனைய பிரதேசங்களில் ஏனைய சமூகங்களுடன் இணைந்திருப்பது போல்தான் இதுவும். முஸ்லிம்களோடு இணைந்து பெரும்பாலான தமிழர்களும் எனக்கு வாக்களித்துள்ளதாகவே நான் எண்ணுகின்றேன். அவர்களும் தமது பிரதிநிதியாக என்னைத் தெரிவு செய்துள்ளனர். இன நல்லிணக்கத்தின் அந்த பொன்னான நாட்களை இன்னமும் நான் எண்ணிப் பார்க்கின்றேன். துரதிஷ்டவசமாக குறுகிய நோக்கம் கொண்ட சுயநல அரசியலால் அந்த இன நல்லிணக்கமும் சமாதானமும் அழிக்கப்பட்டது”.
1992 அகஸ்ட் 22இல் கல்முனைக்குடி மக்களால் மன்சூரின் சேவைகளை கௌரவித்து ஒரு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. அதில் வெளியிடப்பட்ட நினைவு மலருக்கு காலஞ்சென்ற நீலன் திருச்செல்வம் அனுப்பியிருந்த செய்தியில்,
“திருச்செல்வம் குடும்பத்துக்கு மன்சூர் மிக நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். மன்சூர் அவருடன் மிக நெருங்கிய நிலையில் பணியாற்றியுள்ளார். ஐம்பதாம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் அவர் ஒரு சட்ட மாணவக இருந்த போதே இந்த நாட்டின் இளைஞர்கள் பற்றிய எண்ணத்தை பாதித்த, அரசியல் போராட்டத்தால் உணார்ச்சி வசப்பட்டவராகக் காணப்பட்டார். 1958 மொழிப் போராட்டத்தின் போது காலி முகத்திடலில் இடம்பெற்ற ஒரு சத்தியாக்கிரகத்தின் போது ஒரு கும்பலின் தாக்குதலுக்கும் அவர் ஆளானார்”.
எவ்வாறாயினும் அதனைத் தொடர்ந்து வந்த அரசியல் சந்தர்ப்பவாதம் பல பொய்களை விற்பனை செய்து ஏமாற்று வித்தைகளைப் பரப்பி அரசியல் ரீதியாக மக்களிடம் இருந்து அவரை ஓரம் கட்டியது. பிரிவினைவாத அரசியலில் சிக்கிமன்சூரை கைவிட்டது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை புரிந்துகொள்ள கிழக்கு மாகாண மக்களுக்கு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகள் சென்றன. இந்தப் பாதிப்பை ஈடு செய்ய கல்முனை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேச மக்கள் 2013 அக்டோபர் 19இல் மன்சூருக்கு மகத்தான வரவேற்பொன்றை ஏற்பாடு செய்தனர்.
இது தொடர்பான மலருக்கு ஆக்கங்களை வழங்கிய பிரபலங்கள் பலர் மேற்சொன்ன தவறுக்காக வருத்தம் தெரிவித்திருந்தனர். அத்தோடு மன்சூரின் சமூகநலன் சார்ந்த சேவைக்காக அவரை மனப்பூர்வமாகப் பாராட்டியும் இருந்தனர். முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் உள்ளங்களில் அவரின் சேவை இன்னமும் பசுமையாக உள்ளதென்றும் அவர்கள் வர்ணித்திருந்தனர்.
மன்சூர் வர்த்தக வாணிப துறை அமைச்சராக இருந்த போது அவரை சந்திக்கச் சென்ற ஒரு கோடீஸ்வர வர்த்தகக் குழுவில் ஒருவர் அவருக்கு இலஞ்சம் வழங்கும் வகையில் பேசிய போது தனது ஆசனத்திலிருந்து எழுந்து நின்ற மன்சூர் நான் அமைச்சராக இருக்கும் வரையில் இனி நீங்கள் இங்கு வரக்கூடாது என்று சொல்லி அவரை அங்கிருந்து வெளியேறும் படி கூறினார்.
ஊழலிலும் இலஞ்சத்திலும் சிக்கித் தவிக்கும் இன்றைய அரசியல்வாதிகளிடமிருந்தும் மிகவும் தூரமான ஒரு விடயமாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
அண்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் தனது பட்டமளிப்பு விழாவின் போது மன்சூருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விழாவின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்சூருக்கு இந்த கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கியிருந்தார். இந்தப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக அவர் அளப்பரிய பங்காற்றியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள இலங்கை சமூகம் கடந்த வருடம் அவரை கௌரவித்தது. அவரின் மகள் மரியம் நளிமுத்தீன் தெற்கு அவுஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் வைபவத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த போது இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
-லதீப் பாருக்
0 comments:
Post a Comment