சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் 75 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன தம்பதியின் சடலம் பனியில் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடல்மட்டத்தில் இருந்து இரண்டாயிரம் மீட்டருக்கு மேல் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர் முற்றிலும் பனியினால் ஆன பிரதேசமாகும். சுவிட்சர்லாந்தில் உள்ள இம்மலைத்தொடரில் இருந்த பனியாறுகள் தற்போது வற்றியுள்ள நிலையில், அங்குள்ள சுற்றுலா விடுதியின் ஊழியர்கள் பனி ஆற்றுப்பகுதியில் கண்ணாடி குடுவைகள் மற்றும் ஷூக்கள் கிடப்பதை பார்த்துள்ளனர்.
உடனே, அங்கு தோண்டிப்பார்த்த போது, இரண்டு சடலங்கள் அருகருகே கிடந்துள்ளது. இது குறித்த தகவல்கள் வெளியானதும், சடலமாக கிடந்த தம்பதியினரின் வாரிசுகள், அது தங்களது பெற்றோர்கள் மர்செலின் மற்றும் ப்ரான்சின் டுமெளலின் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
1942-ம் ஆண்டு, ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள வாலைஸ் கண்டோ என்ற பகுதியில் மர்செலின் மற்றும் ப்ரான்சின் டுமெளலின் மாடுகளை மேய்க்க அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் அதன் பின்னர் காணமல் போய்விட்டனர். இப்போது, அவர்களின் சடலங்கள் பதப்படுத்தப்பட்ட நிலையிலேயே கிடைத்துள்ளதால், பனிப்புயலில் சிக்கி அவர்கள் பலியாகியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஏழு குழந்தைகளுக்கு பெற்றோரான இவர்களின் சடலங்கள் சிதைந்து போகாமல், நல்ல நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் உரிய முறையில் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment