போதை பொருளுக்காக
தனது 10 மாத குழந்தையை
விற்ற கொடூர தந்தை
வங்கதேச நாட்டின் சிட்டகாங் நகரில் போதைக்கு அடிமையான தந்தை, தனது 10 மாத குழந்தையை விற்றுள்ளார். ஆனால், அந்த குழந்தை மீண்டும் தாயுடன் இணைந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேச நாட்டின் சிட்டகாங் நகரை சேர்ந்தவர் நுஸ்ரத் ஜஹான்(20). இவருக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார். நுஸ்ரத்தின் கணவர் போதை மருந்துக்கு அடிமையானவர்.
கடந்த ஏப்ரல் மாதம் நுஸ்ரத்தின் கணவர் போதை பொருள் வாங்குவதற்காக தனது 10 மாத குழந்தையை, வேறொரு தம்பதிக்கு விற்றுள்ளார். ஆனால், நுஸ்ரத்திடம் குழந்தை காணாமல் போனதாக தெரிவித்தார். இதுகுறித்து நுஸ்ரத் சிட்டகாங் பொலிஸில் புகார் கொடுத்தார். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, நுஸ்ரத்துக்கு கணவர் மீது சந்தேகம் வந்தது. இதுதொடர்பாக பொலிஸாரை அணுகினார். அவர்களும் நுஸ்ரத்தின் கணவரை கண்காணித்து விசாரித்து வந்தனர். விசாரணையில், நுஸ்ரத் கணவர் குழந்தையை விற்றது தெரிய வந்தது. அந்த தம்பதியிடம் இருந்து குழந்தையை மீட்ட பொலிஸார், நீதிமன்றம் மூலம் காணாமல் போன குழந்தையை நுஸ்ரத்திடம் மீண்டும் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து நுஸ்ரத் கூறுகையில், ’’நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். எனது மகளை திரும்பப் பெற்று விட்டேன். அவள் காணாமல் போனதில் இருந்து எனக்கு தூக்கமே இல்லை. இத்தனை நாள் குழந்தையை வைத்திருந்த தம்பதியர், எப்போது வேண்டுமானாலும் என் வீட்டுக்கு வந்து குழந்தையை பார்த்து விட்டு செல்லலாம். அவர்களுக்காக எனது வீட்டுக் கதவு திறந்தே இருக்கும்’’ என தெரிவித்துள்ளார்.
காணாமல் போன குழந்தையை பராமரித்து வந்த தம்பதியரிடம் இருந்து குழந்தையை வாங்கி மீண்டும் தாயிடம் ஒப்படைத்த போது நீதிமன்றத்தில் இருந்த அனைவரது கண்களில் இருந்தும் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment