பதவி விலகினார் பாகிஸ்தான்
பிரதமர் நவாஸ் ஷெரிப்
பனாமா கேட் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நவாஸ் ஷெரிப்
பாகிஸ்தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, 'மொசாக் பொன்சேகா' சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அந்த பட்டியலில் நவாஸ் ஷெரீப்பின் பெயரும் இருந்ததால், அவருக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது.
இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரீப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். ஷெரீப்புக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் என அனைவரிடமும் விசாரணை முடிந்தது.
இதைதொடர்ந்து, சிறப்பு கூட்டு புலனாய்வு குழு, தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதில், பனாமா கேட் விவகாரத்தில் நவாஸ் ஷெரீப் ஆதாயம் பெற்றுள்ளதால் அவர் குற்றவாளி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனால், பிரதமர் பதவியிலிருந்து அவரை தகுதி நீக்கம் செய்வதாகவும், நவாஸ் ஷெரீப் மீது வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கை தேசிய நம்பகத்தன்மை குழு விசாரணை செய்து 6 வாரத்திற்குள் விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றத்திற்கு நேர்மையற்ற தகவல்களை தெரிவித்ததால் பிரதமர் பதவியில் நீடிக்க நவாஸ் ஷெரீப்புக்கு தகுதியில்லை எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் தர் பதவியில் நீடிக்கவும் சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சுப்ரிம் கோர்டின் உத்தரவுபடி நவாஸ் ஷெரிப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் இன்று பிற்பகல் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.