வித்தியா படுகொலை வழக்கு
நீதிபதி இளஞ்செழியனை நோக்கி துப்பாக்கிச் சூடு:
யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் சற்று முன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதிப்பு எதுவும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தற்பொழுது யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், மற்றையவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நீதிபதி இளைஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்த இனந்தெரியாத நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய வேளையில், அவரின் மெய்ப்பாதுகாவலர்களின் அதீத முயற்சியினால் நீதிபதி பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் சாதுர்யமாக தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பிஸ்டல் நல்லூர் கோயிலுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகியோர் தலைமையில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையிலேயே நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.