ஐக்கிய அரபு இராச்சியத்தின்
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேனவை சந்தித்தார்
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
H.H. Sheikh Abdullah bin Zayed Al Nahyan சேக் அப்துல்லா பின் அல்நயன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று சந்தித்தார்.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான தொடர்புகளில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள துரித வளர்ச்சி குறித்து ஜனாதிபதி இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தார்.
இரு நாட்டு உறவுகளுக்கும் பாரிய சக்தியாக விளங்கும் ஐக்கிய அரபு தேசத்தில் வசிக்கும் 125,000 இலங்கைத் தொழிலாளர்களின் பங்களிப்பு தமது பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை வகிப்பதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சேக் அப்துல்லா பின் அல்நயன் இதன்போது தெரிவித்ததையடுத்து, அவர்களது அந்த பங்களிப்பு எமது நாட்டிற்கும் அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றதென ஜனாதிபதி தெரிவித்தார்.
இரு நாடுகளிற்கு இடையிலான பொருளாதார உறவுகளையும் முதலீடுகளையும் மேம்படுத்துதல் தொடர்பாகவும் சுற்றாடல், ஹோட்டல் வர்த்தகத்துறை, நிதி நிறுவனங்கள் முதலியவற்றிற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
டுபாய் நகரத்திலிருந்து கிழக்கு திசையில் அமைந்துள்ள மிகவும் பலமானதொரு நிதி மையமாக கொழும்பு நகரத்தினை மாற்றியமைப்பதற்கான செயற்பாடுகள் தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன்பொருட்டு பிரதான நிதியியல் கேந்திர நிலையமாக விளங்கும் டுபாய் நகரிலிருந்து அதிகளவான ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சரத் அமுனுகம ஆகியோரும் இரு நாடுகளினதும் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment