தன்னால் 2 முறை சிறையில் அடைக்கப்பட்ட நபரை
நிதி மந்திரியாக நியமித்த மஹாதிர் முகம்மது
மலேசிய பிரதமர் மஹாதிர் முகமதுவால் இரண்டு முறை சிறைக்கு அனுப்பப்பட்ட லிம் குவான் இங் மலேசியாவின் புதிய நிதியமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது. மஹாதிர் முகம்மது பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், அந்நாட்டின் மூன்று முக்கிய துறைகளுக்கு மந்திரிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். பீனாங்கு மாகாண முதல்வராக இருந்த லிம் குவான் இங் புதிய நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக 1987 மற்றும் 1998 ஆண்டுகளில் மஹாதிர் பிரதமராக இருந்த போது, கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் லிம் குவான் இங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது, முன்னாள் வங்கி ஊழியர் மற்றும் பட்டைய கணக்காளரான லிம் குவான் இங், மலேசிய அரசின் ஐந்து நபர்கள் அடங்கிய அரசு அலோசகர்கள் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.
44 ஆண்டுகளுக்கு பின்னர் சீன வம்சாவளியை சேர்ந்த ஒருவர் நிதியமைச்சராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மலேசிய பாதுகாப்புத்துறை அமைச்சராக முகம்மது சபு, உள்துறை அமைச்சராக பார்டி பிர்பூமி பெர்சாடு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment