பாராளுமன்ற புதிய அமர்வில்
ஜனாதிபதியின் அங்குரார்ப்பண உரை
தொடர்....3
எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி உரையாற்றினார்.
பாராளுமன்ற புதிய அமர்வில் ஜனாதிபதியின் அங்குரார்ப்பண உரை பின்வருமாறு:
தற்போது எமது நாடு பல்வேறு கட்சிகளினதும் குழுக்களினதும் அரசியல் பலத்தினை உரசிப் பார்ப்பதற்கு பொருத்தமானவொரு சூழ்நிலையில் காணப்படவில்லை. நாட்டின் முன் காணப்படும் சவால்களை ஒன்றிணைந்து வெற்றிகொள்ள வேண்டிய நிலையிலேயே காணப்படுகின்றது என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
இதன்போது, அந்த முன்னுரிமைகளை யதார்த்தமாக்கிக் கொள்வதற்கு முதலில் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையே காணப்படும் அதிகார மோதல்களையும் இரண்டாவதாக அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காணப்படும் அதிகாரப் போராட்டங்களையும் சமனிலைப்படுத்த வேண்டும். தற்போது காணப்படும் சகலவித அதிகார மோதல்களினாலும் மக்களின் எதிர்பார்ப்புக்களே பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும், உண்மையான மக்கள் நேய செயற்திட்டங்களின் நிபந்தனைகளாக பின்வரும் 15 விடயங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
மக்களின் பொருளாதார சுபீட்சத்தை உறுதிப்படுத்தல்.
வறுமையை இல்லாதொழித்தல்.
இளைஞர்களுக்கு புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தல்.
அரச சேவையாளர்களுக்கு திருப்திகரமான சூழலை ஏற்படுத்தல்.
பொலிஸ் மற்றும் முப்படையினரின் தன்னம்பிக்கையையும் உயர் குறிக்கோள்களையும் உறுதிப்படுத்தல்.
சட்டம், அதிகாரம், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தினை சமூகத்தில் உறுதி செய்தல்.
தமிழ் மக்களின் சம உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ளல்.
முஸ்லிம் மக்களின் நலன் மற்றும் சமூக, கலாசார தேவைகளை உறுதிசெய்தல்.
மலையக தமிழ் மக்களின் பொருளாதார, சமூக நிலையை மேம்படுத்தல்.
நாட்டின் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் கலாசார உரிமைகளை பலப்படுத்தி, உறுதி செய்து தேசத்தின் அடையாளத்தினை வலுப்படுத்தல்.
பெண்களை பலப்படுத்துதலும் அவர்களது நேரடி பங்களிப்பும்
சமூகத்திலுள்ள விசேட தேவைகளை உடைய பிரஜைகள் தொடர்பாக உணர்வுபூர்வமாக செயற்படல்.
நாட்டின் இயற்கைச் சூழலை பாதுகாக்கும், தேசிய வளங்களை எதிர்கால சந்தியினருக்கும் பெற்றுத்தரக்கூடிய பேண்தகு அபிவிருத்தியை உறுதிசெய்தல்.
சமய நம்பிக்கைகள் எமது மரவுரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் சகல சமய பெரியார்களையும் மத குருமார்களையும் மகா சங்கத்தினரையும் பேண்தகு முறையில் போஷித்தல்.
அரசியல் பலப் பரீட்சைக்கு அப்பால் சென்று நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக சகல இன, மத, அரசியல், கட்சிகளை ஒன்றிணைத்து கட்டியெழுப்பப்படும் தேசிய பேண்தகு அபிவிருத்தி இலக்கினை உருவாக்குதல்.
மேற்கூறப்பட்ட நிபந்தனைகளின் கீழ் செயற்படும்போது பூரண மற்றும் நுண் அபிவிருத்தி உபாய மார்க்கங்களினூடாக செயற்பட வேண்டியதுடன், அவற்றின் வெற்றிக்காக கட்டமைக்கப்பட்ட மாற்றங்களும் அத்தியாவசியமாகும் என குறிப்பிட வேண்டும்.
அதற்கமைய மக்களின் பிரதிநிதிகளான நீங்கள் ஒன்றிணைந்து மேற்கூறப்பட்ட நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துபவர்களாகவோ அல்லது அதன் மேற்பார்வையாளர்களாகவோ அல்லது ஆலோசகர்களாகவோ நியமிக்கப்படலாம். இந்த ஒட்டுமொத்த செயற்பாட்டை மேற்பார்வை செய்கையில் அபிவிருத்தி பெறுபேறுகளின் அடிப்படையில் அமைந்த அபிவிருத்தி தொடராய்வு செயற்திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்த என்னால் நடவடிக்கை எடுக்கக்கூடியதாக அமையும்.
இந்த அரசாங்கம் தொடர்பாக பல்வேறு தரப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களினால் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கின்றனர். அவ்வனைத்து விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் நாம் மிகுந்த நேர்மையோடு அவை தொடர்பில் கவனம் செலுத்துவதுடன்,
அது தொடர்பாக நாம் சுய விமர்சனத்திலும் ஈடுபட்டுள்ளோம் என்பதை தெரிவிக்க வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை ஏற்கனவே நாம் உறுதி செய்துள்ளோம். ஆயினும் இன்னும் சுதந்திரமாக உள்ள பாரியளவிலான மோசடியாளர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமை தொடர்பாக விமர்சனங்கள் காணப்படுகின்றன.
ஊழலை முற்றாக இல்லாதொழித்து சகல ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்துதலே எமது ஏகோபித்த எதிர்பார்ப்பாகும். அதுவே ஒட்டுமொத்த மக்களின் பிரார்த்தனையுமாகும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
நாட்டின் இரண்டு பிராதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பான குற்றச்சாட்டே எம்மீது சுமத்தப்படும் மற்றுமொரு குற்றச்சாட்டு ஆகும். நாட்டிற்கு எதிராக உள்ள சவால்களை கருத்திற்கொள்ளும்போது சகல கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டிற்காக முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். பாரியதொரு கடன் சுமை எம் முன்னே உள்ளது. பயனற்ற வீண்விரயங்கள் செய்யப்பட்ட யுகத்தின் இழப்புகளையும் நாம் நீக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் நாடு மீண்டும் முன்னேற்றமடைவதற்குள்ள இறுதி சந்தர்ப்பம் இதுவே என்பதை கருத்திற்கொண்டு சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
வைராக்கியம், குரோதம் நிறைந்த நாட்டில் ஆட்சி மாற்றங்களின்போது இடம்பெறும் பாரியளவிலான அரசியல் பழிவாங்கல்கள் இல்லாத, தோல்வியடைந்தவரும் வெற்றியாளரும் அபிமானத்தோடு வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டியதும் இன்றைய அரசியல் கடமையாகுமென நான் கருதுகின்றேன்.
எமது உன்னதமான தாய்நாட்டிற்கு நேர்மையாக சேவையாற்றினேன் என்ற உணர்வு எமது மனசாட்சியாக நாம் மறையும் வரை எம் மனதில் எதிரொலிக்க கூடிய வகையில் செயலாற்ற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக அமைய வேண்டும். அதற்கான எமது எதிர்காலத்திற்காக நாம் அரப்பணிப்புடன் செயற்படுவோம்.
இந்த அரசாங்கத்தை அமைக்கும்போது எமக்கு எதிராக பல சவால்கள் காணப்பட்டன. ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆதிக்கத்தையும் மீண்டும் நிலைநாட்டுவதே அவற்றுள் முதலாவதாகும். இனங்களுக்கிடையே நம்பிக்கையையும் ஒற்றுமையையும் உறுதி செய்தல் இரண்டாவதாகும். பாரிய கடன் சுமையில் சிக்கியிருந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல், நாம் இழந்திருந்த சர்வதேசத்தின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளல் என்பனவும் அவற்றுள் உள்ளடங்குகின்றன. எவ்வாறான குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும் இவ் அனைத்து துறைகளிலும் வெற்றிகரமான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள கடந்த மூன்று வருட காலத்திற்குள் எமது அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. அதேபோன்று இவ்வனைத்து துறைகளிலும் மேலும் நிறைவேற்றப்பட வேண்டிய பல விடயங்களும் காணப்படுகின்றன.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
பலமான, நவீன இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அத்தியாவசியமான முயற்சியாண்மை முகாமைத்துவத்தில் நாட்டை ஈடுபடுத்தலும் தேசிய வர்த்தக சமூகத்திற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான கொள்கைகளை உருவாக்குதலும் அவசியமாகும்.
அத்தோடு எமக்கு பழக்கப்பட்ட மோசடி அரசியலை தோற்கடித்து சமூகத்திற்கு நன்மை பயக்கும் மக்கள் நேய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக பாடுபட வேண்டியுள்ளது. அனைத்து குடிமகனுக்கும் வெற்றிபெறக்கூடிய பொருளாதாரமே தேவைப்படுகின்றது.
இங்கே, குறிப்பாக எமது நாட்டின் விவசாய மக்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். மூன்று வருடங்களாக தகுந்த மழையின்மையால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கான விவசாய துறையின் பங்களிப்பும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதிக மழை மற்றும் நீண்டகால வரட்சி ஆகியன பூகோள ரீதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் காலநிலை மாற்றங்களின் விளைவாகவே இருக்கின்றன. வரட்சி நிலவிய காலத்தில் அப்பிரதேச மக்களுக்கு உணவை பெற்றுத்தரும் உதவித்திட்டங்கள் உள்ளிட்ட நிவாரண திட்டங்களை செயற்படுத்துவதற்காக 38000 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டிருக்கின்றது.
இயற்கையின் பாதகமான தாக்கங்களிலிருந்து மீண்டு உரிய முறையில் வெற்றிகரமாக விவசாயத்துறையில் ஈடுபடுவதற்கு தேவையான வழியினை நிர்மாணித்தல் அவசியமாகும். விவசாயத்துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு இன்னும் நாம் போதுமான அளவு வெற்றி பெற்றிருக்கிறோம் என மகிழ்ச்சி கொள்ள முடியாது. விவசாய உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல், பகிர்ந்தளித்தல் ஆகிய துறைகளை நவீனப்படுத்த வேண்டியிருக்கிறது.
அத்தோடு நடுத்தர வருமானத்தினைப் பெறும் ஒரு நாடு என்ற வகையில் புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்துறை மீது கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்திருக்கின்றது.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
நிலையான நாட்டின் அடித்தளம் தேசிய நல்லிணக்கமே ஆகும். உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை இயற்றத்தக்க கட்டமைப்பினை அறிமுகப்படுத்த வேண்டும். அந்த நோக்கை வெற்றி கொள்வதற்கு தற்போது செயலில் இருந்துவரும் மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என நான் நம்புகிறேன். எவ்வாறான விமர்சனங்கள் எழுந்த போதிலும் வடக்கு கிழக்கு மக்களின் பொறுமையிழப்பினை நிரந்தரமாக சமரசப்படுத்த வேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்தல் வேண்டும். பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை தோற்கடித்த போதிலும் அவர்களின் கொள்கையினை முழுமையாக தோல்வியுறச் செய்வதற்கு இன்னும் முடியாது போயிருக்கின்றது. கடந்த மூன்றரை வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பை பெற்று அந்தக் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கே நான் முயற்சித்து வந்தேன்.
யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை கையாள்வதென்பது மிகுந்த சவாலாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற சமயம் அச்சவாலுக்கான விடைதேடும் காரியம் ஏழு வருடங்களால் தாமதமாகி இருந்ததனால் அச்சவால் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளாகியிருந்தது. மூன்று தசாப்தங்களாக சமூகத்தில் வேரூன்றியிருந்த போர் மனநிலையினை அகற்றி சகவாழ்வினை ஏற்படுத்துவதற்கு இன்னும் எம்மால் பாரிய வேலைகளை செய்யவேண்டி இருக்கின்றது. ஒரு அரசாங்கத்தினால் மாத்திரம் அதனை செய்வது கடினமாகும். அதற்கு சமூகத்தின் அனைத்து தரப்புகளினதும் நேரடிப் பங்களிப்பு கட்டாயமாகத் தேவைப்படுகின்றது. அதனால் அந்த நோக்கை அடைவதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோமென அனைத்து தரப்புகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.
தேசிய பாதுகாப்பு மீதான எமது கவனமும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. எமது பூமியின் பாதுகாப்பு மனிதர்களின் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு ஆகியன இங்கு முக்கிய துறைகளாக அமைகின்றன. பூமியின் பாதுகாப்பின் கீழ் கடல் பரப்பு மீதும், மனிதப் பாதுகாப்பின் கீழ் உணவு மற்றும் நீர்ப் பாதுகாப்பு ஆகியனவும் முக்கியத்துவம் பெறுகின்றது குறிப்பாக இந்து சமுத்திரத்தின் கேந்திர ஸ்தானத்தில் இலங்கை அமைந்திருப்பதால் எமக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதேபோல் நாம் எதிர்கால நோக்குடன் மிக நுட்பமாக கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு துறை சவால்களும் இருக்கவே செய்கின்றது என்பதை நாம் எமது கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். ஆதலால் சர்வதேச உறவுகளை பேணுவதில் நடுநிலையான, நட்பு ரீதியிலான கொள்கையின் முக்கியத்துவத்தை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
எமது நட்பு ரீதியிலான வெளிநாட்டுக் கொள்கையே எமக்கு மிகுந்த பலனைப் பெற்றுத் தந்திருக்கின்றது. உலகில் அனைத்து நாடுகளைப் போன்றே ஐக்கிய நாடுகள் சபை முதலான சர்வதேச அமைப்புகளுடன் நாம் மிகுந்த நட்பையும் தோழமையையும் உருவாக்கிக்கொள்வதற்கு வேறொரு சந்தர்ப்பம் இல்லை என்றே கூறலாம்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
2015 இல் நான் தலைமையேற்ற யுக மாற்றம் இன்னும் நிறைவடையவில்லை.
அன்று அது இலங்கைக்கு புதியதோர் அனுபவமாக அமைந்திருந்தது.
2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட மாதம் முதல் தேசிய அரசை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தாலும் அதற்கான அரசியல் மற்றும் சமூக முதிர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பது கடந்த மூன்றாண்டுக்குள் ஏற்பட்ட சம்பவங்கள் ஊடாக மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. ஒப்பந்த ஜனநாயகம் மற்றும் உரையாடல் ஜனநாயகம் ஆகியவற்றை இன்று பல நாடுகள் தனது ஆட்சியின் அடிப்படையாக கொண்டு செயற்பட்டாலும் எமக்கு அவ்வகையான எண்ணக்கருக்கள் புதியதாகவே உள்ளன.
நிகழ்கால அரசியலை பார்வையிடும்போது எதிர்க்கட்சியின் செயற்பாடு வேறொரு வழியில் செல்ல வேண்டியுள்ளதுடன், தேசிய அரசுக்குள் சகோதர கட்சிகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தேவைபட்டுள்ளது.
தேசிய ஆட்சி ஒன்றுக்கொன்று வித்தியாசமான கோணங்களைக் கொண்ட கட்சிகளின் இணைப்பால் உருவாகியுள்ளது. அந்த கட்சிகள் அனைத்தும் புத்த பகவான் காட்டிய வழியில் செல்லவேண்டியதுடன் வஜ்ஜீன் சமூகத்தினரைப் போல ஒற்றுமை மற்றும் பேச்சுவார்த்தையை முதன்மையாக வைத்து அவர்கள் பின்பற்றிய வழிகளை நாமும் பின்பற்றுவோம். ஜனாதிபதி என்ற வகையில் கடந்த மூன்றாண்டுகளாக நான் இவ்வாறே செயற்பட்டேன். அது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வெற்றிக்கு காரணமாக அமையும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
இறுதியாக நாம் அரசாக எழுந்து நிற்பதுடன், பொருளாதார அபிவிருத்தியை பெற்றுக்கொள்கையில், எமது உரிமைகள் போலவே, தேசியத்தன்மை, கலாசாரம், எமது விதிமுறைகள் ஆகியவற்றை வலுவான அரசியல் சிந்தனையுடன் செயலாற்ற வேண்டுமென்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
பொதுமக்களின் அரசியல் இதயத் துடிப்பை உணர்ந்து செயற்படுவதை நாம் நோக்காகக்கொண்டு இலங்கையை வெற்றிபெற்ற அரசாக கட்டியெழுப்புவதற்கு வருமாறு அழைப்பு விடுவதுடன் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெற்றி கிடைக்கவேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறேன்.
நன்றி
ஜனாதிபதி,
மைத்ரிபால சிறிசேன
2018.05.08
0 comments:
Post a Comment