மதரஸாவில் தேசிய கீதம் பாட முயன்ற
மாணவர்களைத் தடுத்த ஆசிரியர்கள் 3 பேர் கைது
மதரஸாவின் அங்கீகாரமும் ரத்து


சுதந்திர தினத்தன்று மாணவர்களை தேசிய கீதம் பாடக்கூடாது என தடை விதித்து சர்ச்சைக்குள்ளான உத்தரப் பிரதேச மாநில மதரஸாவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோல்ஹுய் காவல் நிலைய எல்லைக்குள் வரும் படாகோ பகுதியில் மதரஸா அராபியா ஆலே பெண்கள் கல்லூரியின் அங்கீகாரத்தை உத்தரப் பிரதேச மாநில கல்வித்துறை ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
மாவட்ட சிறுபான்மை நலத்துறை அதிகாரி பிரபாத் குமார் கூறுகையில், ''இக்கல்வி நிறுவனத்தின் மீது எழுந்த குற்றச்சாட்டுகளின் மீது மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன் அடிப்படையில் விசாரணைக் குழு அறிக்கை அளித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
இம் மதரஸாவில் சுதந்திர தினத்தன்று மூவர்ணக் கொடியை ஏற்றிய பிறகு தேசிய கீதம் பாட மாணவர்கள் முயன்றபோது அதை மதரஸாவின் முதல்வர் ஃபாஸ்லால் ரஹ்மான் மற்றும் சில ஆசிரியர்கள் தடுத்ததாகக் கூறப்பட்டது.
மேலும், தேசிய கீதம் பாடும் மாணவர்களை மதரஸா முதல்வர் தடுத்து நிறுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலான பிறகு இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் மதரஸாவின் மூன்று ஆசிரியர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இப்பிரச்சினையில் மாவட்ட சிறுபான்மை நலத்துறை அதிகாரியை அழைத்து உடடினாயக விசாரணை மேற்கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் அமர்நாத் உபாத்யாய உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் விசாரணை அறிக்கையின்படி மதரஸா அராபியா ஆலே பெண்கள் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் படிக்கும மாணவர்களை வேறுசில நிறுவனங்களில் படிக்க வைக்க அரசு மாற்று ஏற்பாடுகள் செய்து தரும் என ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top