பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களின் வாக்குறுதிப்படி
அஷ்ரப் ஞாபகார்த்த மையம்
கல்முனையில் நிறுவப்பட்டதா?
மக்கள் கேள்வி
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் ஒரு மைக்கல்லாகத் திகழ்ந்து எங்களை விட்டுப் பிரிந்த மர்ஹும் அஷ்ரப் அவர்கள், எங்களுக்கு விட்டுச்சென்ற அடையாளங்களை எதிர்கால சந்ததியும் அறிந்து கொள்வதற்காக அன்னார் அரசியல் பணியாற்றிய கல்முனையில் விரைவில் அஷ்ரப் ஞாபகார்த்த மையம் ஒன்றை நிறுவவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி
மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அல் ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் கடந்த 2017-09-16 ஆம் திகதி மக்களுக்கு தெரிவித்திருந்தார்.
மர்ஹும் அஷ்ரப் அவர்கள் மரணமாகி 17 வருட பூர்த்தியையொட்டி ஞாபகார்த்த நிகழ்வும் கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆ பிராத்தனை வைபவங்களும் கல்முனை மசூறா குழுவின் ஏற்பாட்டில் பிரதி அமைச்சரின் கல்முனை அலுவலகத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்றபோதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் 2018.09.16 ஆம் திகதி மர்ஹும் அஷ்ரப் அவர்கள் மரணமாகி 18வருடம் பூர்த்தியடைகின்றது பிரதி அமைச்சர்
ஹரீஸ் அவர்களின் அந்த உறுதிமொழிக்கும் பேச்சுக்கும்
என்ன நடந்துவிட்டது? எல்லாம் காற்றில் பறந்துவிட்டனவா என்று கேள்வி எழுப்பப்படுகின்றது.
எதிர்வரும் 2018.09.16 ஆம் திகதி மர்ஹும் அஷ்ரப் அவர்கள் மரணமாகி 18வருட பூர்த்தியையொட்டி ஞாபகார்த்த நிகழ்வும்
கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆ பிராத்தனை வைபவங்களும் நடைபெறத்தான் போகின்றன.
அஷ்ரப் அவர்களினால் அரசியலுக்கு வளர்க்கப்பட்டவர்கள், அன்னார்மீது
நம்பிக்கை கொண்டவர்கள், அவர்மீது விசுவாசம் கொண்டவர்கள், அன்னாரை உண்மையாக நேசிப்பவர்கள்,
அவரின் பெயரால் அரசியல் நடத்திக் கொண்டு அன்னாருடைய நினைவு நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை
ஏற்பாடுசெய்து நடத்தி உறுதிமொழிகளையும் வழங்குகின்றனர்.
ஆனால் அது நடைமுறையில் வருவதாக இல்லை என மக்கள் குறை தெரிவிக்கின்றனர்.
பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்கள் கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த
மையம் ஒன்று நிறுவப்படும் என்று கடந்த 2017-09-16 ஆம் திகதி கல்முனையில்
தெரிவித்திருந்தார் நிறுவப்பட்டதா? என்றும்
கேள்வி எழுப்பப்படுகின்றது.
முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையினரால் பெரும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட
மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் முஸ்லிம்களுக்கு அரசியல் சுயமுகவரி பெற்றுத் தந்த
சரித்திர நாயகன்.
அன்னாரின் மரணத்திற்குப் பின்னர் அன்னாருடைய பெயரைச் சொல்லி
அரசியல்வாதிகள் பலர் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
விசாரணை ஆணைக்குழு நியமித்து உண்மை நிலையைக் கண்டறியப்போவதாக
பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சியில் இருந்தபோது கடந்த 2000.10.04 ஆம்
திகதி சாய்ந்தமருது ஐக்கிய விளையாட்டு (தாமரை குளம்) மைதானத்தில் நடைபெற்ற மாபெரும்
பொதுக்கூட்டம் ஒன்றில் வைத்து முஸ்லிம் சமூகத்திற்கு வாக்குறுதி ஒன்றை வழங்கியிருந்தார்.
“இந்நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்த பின் மர்ஹும்
அஷ்ரபின் அகால மரணம் குறித்து நாங்கள் ஒரு பூரண
விசாரணை நடத்துவோம். இதற்கென அமைக்கப்படும் விசாரணைக்குழுவில் அஷ்ரபின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும் நியமிப்போம். அஷ்ரபின் மர்ணித்தின்
காரணம் என்ன? இதன் பின்னணி என்ன? என்பவற்றையெல்லாம் நாட்டு மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
அஷ்ரபின் மரணம் தொடர்பாக எமது விமானப்படையினர்மீது குற்றம் சுமத்திவிட்டு எவரும் விலகிச்சென்று விடமுடியாது. அமைச்சர் அஷ்ரப்
மரணிப்பதற்கு முன் இரண்டு நாட்களில் பல பிரச்சினைகளை அவர் எதிர் நோக்கினார். எனவே, அன்னாருடைய
மரணத்தின் பின்னணியை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். “ இது பிரதம மந்திரி ரணில்
விக்கிரமசிங்கவின் வாக்குறுதி.
தலைவரின் மரணம் பற்றிய சில காத்திரமான தகவல்கள் தமக்கு கிடைத்தன
என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடந்த 2001.08.10 ஆம்
திகதி கல்முனை நகர மண்டபத்திற்கு முன்னால் இடம்பெற்ற (“மக்கள் நிதிமன்றத்திற்கு முன்
முறையீடு“) மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகக்கூறினார்.
“தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னணியிலே நடந்த பல விடயங்கள்
இன்னும் பகிரங்கமாகவே சொல்லப்படாத விடயங்களாகவே இருக்கின்றன. அப்படியான பல விடயங்கள்
எமக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பலர் நேரில் வந்தும் எங்களிடம் சொல்லுகின்றார்கள்.
எழுதியும் தருகிறார்கள். கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாகவுமது ஒரு ஆட்டோவில்
கொண்டு செல்லப்பட்டதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
மறைந்த தலைவருக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும்.
மறைந்த தலைவரோடு கடைசி மணித்தியாலங்களில் இருந்த பலர் உள்ளனர். பலவிதமான திடுக்கிடும்
தகவல்களை அவர்கள் சொல்லுகிறார்கள்.
விசாரணைக்கு முன்வரும் வரை பொறுமையாக இருந்து இந்த விடயங்களை
வெளியிடலாம் என உத்தேசித்திருக்கின்றேன். “இது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின்
வாக்குறுதி.
எல்லோரும் வாய் வீச்சில் விண்ணர்களாக இருக்கின்றனர். சாதனையில்
சோரம் போய்விடுகின்றார்கள்.
0 comments:
Post a Comment