நேபாளத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு
பூரண இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன்
அமோக வரவேற்பு

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான வங்காள விரிகுடாவின் வாயில் என்ற பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளம் பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (29) நண்பகல் கத்மண்டுவில் உள்ள தரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜனாதிபதியை நேபாளத்தின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஐஸ்வர் போக்ரெல் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அந்நாட்டின் பூரண இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்படதுடன், இரு நாடுகளினதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
ஜனாதிபதி பயணம் செய்த பாதையின் இருமரங்கிலும் இரண்டு நாடுகளினதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
இந்த வரவேற்பு நிகழ்வின்போது ஜனாதிபதியுடன் நேபாளத்தின் பிரதிப் பிரதமர் சுமூகமாக கலந்துரையாடினார்.
இம்மாதம் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ள மாநாட்டின் கருப்பொருள் 'சமாதானம், சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மைவாய்ந்த வங்காள விரிகுடாவை நோக்கி' என்பதாகும்.
பிம்ஸ்டெக் அமைப்பு பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 07 தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைக்கொண்ட வலயமைப்பாகும்.

இதன் முக்கிய நோக்கம் வங்காள விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதாகும்.
ஜனாதிபதி 31ஆம் திகதி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி நேபாள பிரதமர் கே.பீ. ஓலி மற்றும் நேபாள ஜனாதிபதி பித்யாதேவி பண்டாரி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.
மேலும் இலங்கைக்கு பொருளாதார சமூக ரீதியான பல்வேறு நன்மைகளை கொண்டுவரும் வகையில் மாநாட்டில் பங்குபற்றும் சில அரச தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளார்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top