பாலஸ்தீனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்தியது அமெரிக்கா

ஜனாதிபதி டிரம்ப் எடுத்துள்ள
மனிதாபிமானமற்ற மற்றுமொரு முடிவு



காசா, மேற்கு கரை பகுதியில் போர் சூழலில் வாழும் பாலஸ்தீனத்தின் நலனுக்காக, மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா வழங்கி வந்த ரூ.1400 கோடி நிதி உதவியை நிறுத்துமாறு ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
யூதர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மும்மதத்தினரின் புனித தலமாக கருதப்படும் ஜெருசலம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டாக மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக போர் சூழலில் சிக்கி காசா, மேற்கு கரை பகுதிகளில்  வாழும் பாலஸ்தீனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்காக மனிதாபிமான அடிப்படையில், அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா கடந்த 20 ஆண்டாக நிதி உதவி அளித்து வருகிறது.
இந்த நிதியை நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரி கூறுகையில், ‘‘ஜனாதிபதியின் நேரடி உத்தரவுப்படி, பாலஸ்தீனர்களுக்கான ரூ.1400 கோடி நிதியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை, வேறு முக்கிய பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்
.கடந்த ஜனவரி மாதம், பாலஸ்தீன அகதிகளுக்காக ஐநா.வுக்கு வழங்கி வந்த நிதியை அமெரிக்கா நிறுத்திக் கொண்டது. அதைத்தொடர்ந்து, கடந்த மே மாதம், அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தை ஜெருசலமுக்கு மாற்றுவதாக அறிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாலஸ்தீனம், அமெரிக்காவுடனான உறவை துண்டித்துக் கொண்டது. அதைத்தொடர்ந்து தற்போது பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியாக வழங்கப்படும் நிதியையும் அமெரிக்கா நிறுத்தி இருப்பதற்கு பாலஸ்தீனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top