மாகாணசபை தேர்தலுக்கான எல்லைநிர்ணய அறிக்கை
.தே., ஒன்றிணைந்த எதிரணி
பிரேரணையை எதிர்க்க தீர்மானம்



மாகாணசபை தேர்தலுக்கான எல்லைநிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும் தீர்மானித்துள்ளன.
அதேநேரம் இன்றையதினம் எல்லைநிர்ணய அறிக்கை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதா? அல்லது விவாதத்தை நடத்தி பிறிதொரு தினத்தில் வாக்கெடுப்பு நடத்துவதா? என கட்சித் தலைவர்கள் இன்று காலையே முடிவெடுக்கவுள்ளனர்.
மாகாணசபைத் தேர்தல்களை புதிய முறையில் நடத்துவதா? அல்லது பழைய முறையில் நடத்துவதா? என்பதில் கட்சிகளுக்கிடையில் மாறுபட்ட நிலைப்பாடு காணப்படும் நிலையிலேயே மாகாணசபை குறித்த எல்லைநிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க கட்சிகள் சில முடிவெடுத்துள்ளன.
எந்த முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது என்பதில் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. புதிய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் எல்லைநிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இன்று விவாதம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையிலேயே நேற்றையதினம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மஹிந்த ஆதரவு அணியினரின் பாராளுமன்ற குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் தனித்தனியாக நடைபெற்றன. இதில் இன்றைய விவாதம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக பலரும் கூறியுள்ளனர். வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பாலும் வெளிநடப்புச் செய்யலாம் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரும் தீர்மானித்துள்ளனர்.
கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது. இதில் முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில், எல்லைநிர்ணய அறிக்கை குறித்த வாக்கெடுப்பை விவாதம் முடிவில் நடத்துவதா அல்லது பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைப்பதா என்பதை தீர்மானிக்க இன்று காலை கட்சித் தலைவர்கள் மீண்டும் கூடுகின்றனர்.
இக்கூட்டத்திலேயே வாக்கெடுப்புக் குறித்த தீர்மானம் எடுக்கப்படும்.
புதிய முறையான கலப்புமுறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விடாப்பிடியாக இருந்து வருகிறது.
மோசடி நிறைந்த விகிதாசார முறைக்கு மீண்டும் செல்லாது புதிய முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை சு. தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. அதேநிலைப்பாட்டையே ஜே.வி.பியும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top