பலஸ்தீனம் போன்று
கல்முனையும் கபளீகரம் செய்யப்படுகிறது.
இதனை எத்தனை பேர் உணர்ந்தார்களோ தெரியாது..?



ஒருகாலத்தில் இலங்கையின் மூன்றாவது நகரம் என்பது மட்டுமல்ல முஸ்லிம்களின் முகவெற்றிலை நகரமாகவும் கல்முனை இருந்து வந்ததென்றால் அதனை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இலங்கை சுதந்திரம் பெற்ற காலம்தொட்டு கல்முனை என்ற நாமத்துக்கு மகுடம் சூட்டி அழகு பார்த்தவர்கள் முஸ்லிம்களேயாவார்கள், இந்த நிலையில் இங்கே வாழும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் மொழி அடிப்படையிலும், பிரதேச அடிப்படையிலும் பின்னிப்பினைந்து வாழ்ந்து வருகின்ற ஒரு சமூகமாகக் காணப்படுகின்றனர்.
கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் 75 கிராமசேவகர் பிரிவுகள் உண்டாக்கப்பட்டு (இதில் 29 தமிழ் பிரிவுகளாகும்.) நிர்வாகம் நடைபெற்று வருகின்றதுபோது, 1989ம் ஆண்டு காலப்பகுதியில் கல்முனை உப பிரதேச செயலகம் (தமிழ் பிரிவு) என்ற ஒன்றினை ஏற்படுத்தி நிலத்தொடர்பற்ற 29 கிராமசேவர்கள் பிரிவுகளையும் நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடுகள் நடைபெறும் போது அன்றிருந்த நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் தூங்கிகொண்டுதான் இருந்தார்களா என்ற கேள்வியை இன்றய இளைய சமூதாயம் கேட்கவேண்டிய கேள்வியாகவும் உள்ளது.
கல்முனை பிரதேச செயலக எல்லையானது வடக்கே மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவின் கல்லாறு கிராமத்தினையும், தெற்கே சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவையையும், கிழக்கே கடலையும், மேற்கே சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளிப் பிரதேச செயலகப் பிரிவுகளையும் எல்லைகளாகக் கொண்டதாகும். இந்த எல்லைகளுக்குள் வாழும் மக்கள் கல்முனையின் மத்தியிலே அமைந்துள்ள பிரதேச செயலகத்துக்கு வந்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எந்தவித சிரமங்களும் இல்லை எனலாம். இந்த நிலையில் தங்களுடைய விடயங்களை நாங்களே கவணிக்கவேண்டும் என்று தமிழ் தரப்பினர் பிரிந்து செல்வதற்கு கல்முனை பிரதேச செயலகத்தினாலோ அல்லது முஸ்லிம் மக்களினாலோ அவர்களுக்கு எந்தவித அநியாயங்களும் நடந்ததாகவும் காணமுடியவில்லை. இந்த நிலையில் 1989ம் ஆண்டு முதலமைச்சராக வரதராஜ பெருமாள் இருக்கின்றபோது அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி உப தமிழ் பிரிவொன்றை கல்முனையில் தமிழர்கள் ஏற்படுத்திக்கொண்டதன் நோக்கம் இனவாத சிந்தனை கொண்டதாகும் என்பதே உண்மையாகும்.
காலாகாலமாக கல்முனை நகரானது முஸ்லிம்களின் தலைநகராக இருப்பது மட்டுமல்ல ஒட்டுமொத்த அம்பாரை மாவட்ட முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அது ஒரு முகவெற்றிலையாகவே இருந்துவரும் அதேநேரம் முஸ்லிம்களின் பொருளாதாரங்கள், கடைகள், பள்ளிவாசல்கள் இதர வசதிகளுடன் 90 வீதமான பொருளாதாரங்கள் அந்த நகரத்தை ஒட்டியே அமைந்துள்ளது எனலாம். அப்படிப்பட்ட ஒரு நகரத்தை தங்கள் வசம் எடுத்துக்கொள்வதோடு, அந்த நகரத்துக்குள் வசிக்கும் முஸ்லிம்களின் பொருளாதாரத்திலும், இதர விடயங்களிலும் தாக்கம் செலுத்தி அவர்ளுடைய இருப்பை கேள்விக்குட்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருக்கலாம் என்பது அவர்களுடைய நடவடிக்கைகளைக் கொண்டே தெளிவாகின்றது எனலாம். இதனை கல்முனை முஸ்லிம்கள் மட்டுமல்ல, அம்பாரை மாவட்டத்தில் வசிக்கும் எந்த முஸ்லிம்களும் விரும்பமாட்டார்கள் என்பதே உண்மையாகும்.
அதுமட்டுமல்ல யுத்தம் நடைபெறும்போது, கல்முனை ஆஸ்பத்திரியின் எல்லைவரைக்கும் இருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான சில காணிகள் ( .ஆர்.எம் ஹனிபா அவர்களின் பெற்றோல் செட், மல்லிகா முதலாளிக்குறிய காணிகள், டொக்டர் முருகேசிப்பிள்ளை இருந்த இடங்கள்) எல்லாம் இன்று தமிழர்களுக்கு விற்கப்பட்டு விட்டது, யுத்தமும் அதனையொட்டிய பயங்கரவாத அச்சுறுத்தலும் இல்லாதுவிட்டிருந்தால் இந்த இடங்களை முஸ்லிம்கள் இழந்திருக்கமாட்டார்கள் என்பதே உண்மையாகும். இதனை நாங்கள் விற்றல் வாங்கள் என்ற விடயத்துக்குள் கொண்டுவந்தாலும் இதற்கு பின்னாலும் ஒரு நீண்டகால சதித்திட்டம் ஒன்று இருக்கின்றது என்பதையும் நாங்கள் நோக்கவேண்டியுள்ளது.
இதுவெல்லாம் கல்முனை நகரை முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து ஆக்கிரமிப்பு செய்யும் ஒரு செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது. பலஸ்தீனத்தை எப்படி இஸ்ரவேல் ஆக்கிரமிப்பு செய்து பிடித்ததோ அதே போன்றதோர் காட்சியைத்தான் கல்முனையிலும் நிறைவேற்றி வருகின்றார்களோ என்று என்னத்தோன்றுகிறது. கல்முனை நகரம் என்பது 30க்கு மேற்பட்ட மாகாணசபையின் கீழ் உள்ள அரச திணைக்களங்களைக் கொண்டுள்ள ஒரு இடமாகும். அந்த திணைக்களங்களில் முஸ்லிம் பிரிவு என்றும், தமிழ் பிரிவு என்றும் இரண்டாக பிரித்து செயல்பட அனுமதித்துள்ளார்கள். இது எங்குமே நடக்காத ஒருவிடயமாகும். ஆகவே இதுவும் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட செயல்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.
இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் தென்கிழக்குக்கு தலைநகராக முஸ்லிம்கள் கனவு காணும் "கல்முனை" என்ற நாமத்தையும், அதன் நகரத்தையும் அபகரிப்பு செய்யும் ஒரு திட்டமாகவே கருதப்பட வேண்டியுள்ளது. இந்த நோக்கத்தை செயல்படுத்தவே தமிழ் தலைவர்களும் இதன் பின்னாலிருந்து செயல்படுகின்றார்களோ என்று என்னத் தோன்றுகிறது. அதற்கு ஆதாரமாக ஒரு விடயத்தை குறிப்பிடலாம். அண்மையில் பிரதமர் ரணிலுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு தமிழ் தரப்பினால் பிரதமர் ரணிலிடம் முன்வைக்கப்பட்ட பத்து கோரிக்கைகளில் இரண்டாவது வைக்கப்பட்ட கோரிக்கைதான் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையாகும். ( பிரதமர் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு செயல்பட முயற்சித்தபோது, அதற்கு உரிய நேரத்தில் தடையை ஏற்படுத்தி கல்முனையை காப்பாற்றியது யார் என்பதை பிறகு விரிவாக எழுதுவேன்).
இப்படியிருக்கும் போதுதான் அதன் ஒரு செயல்பாடாக அண்மையில் கல்முனை தமிழ் பிரிவின் எல்லையை தீர்மானிக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்காக அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட விடயமாகும். அந்த விடயம் மிகவும் நுணுக்கமாகவே கையாளப்பட்டிருந்தது. அதற்கான அமைச்சரை ஏதோ ஒருவகையில் கைக்குள் போட்டுக்கொண்டு அவர் மூலமாக அமைச்சரவை அனுமதியை பெறுவதற்கு முயற்ச்சித்திருந்தார்கள் என்றவிடயத்தை அறிந்தோம். (அதனைப்பற்றி விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன்). அந்த விடயத்தை ஏதோவொரு வழியால் அறிந்துகொண்ட பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் அதை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்ற விடயத்தையும் அறிந்தோம். அதற்காக அவரை இந்த இடத்தில் பாராட்டியாகவேண்டும். கல்முனை தமிழ் பிரிவுக்கான பிரதேச செயலக எல்லைகள் உறுதிப்படுத்தப்பட்டால் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களுக்கு அது பெரிய சேதத்தை எதிகாலத்தில் ஏற்படுத்தும் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இந்த விடயமானது பிரதியமைச்சர் ஹரீசுக்கு மட்டுமான கடமையென்று யாரும் ஒதுங்கி கொள்ளவும் கூடாது. இதனையெல்லாம் அறிந்துகொண்டும் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களும் இதர முஸ்லிம் அரசியல்வாதிகளும் கவணமின்றி இருந்தார்களேயானால் அதைவிட துரோகம் ஒன்றுமே இருக்கமுடியாது என்பதே உண்மையாகும்.
ஆகவே இன்றும் அந்தப்பிரச்சினை முடிந்துவிடவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது, இந்த நல்லாட்சி அரசாங்கம் வீட்டுக்கு போவதற்கிடையில் தங்களது காரியங்களை சாதித்துவிடவேண்டும் என்பதற்காகவே அவர்கள் முயற்சிக்கின்றார்கள் என்பதே உண்மையாகும். மாற்று அரசாங்கம் ஒன்று வருமாயிருந்தால் இப்படியான விடயங்களை சாதிக்கமுடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் இவ்வளவு விடயங்களையும் இந்த ஆட்சிக்குள் முடித்துவிடவேண்டும் என்று துடிக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.
ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டால் கல்முனையின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரலாம் என்பதே எங்களின் கருத்தாகும். யாருக்கும் பாதகமில்லாமல் கல்முனை பிரதேசம் முன்பு இருந்தது போன்று நான்காக பிரித்து தீர்வை பெற்றுத்தரக்கூடிய தலைவன் வரும்வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியுள்ளது.
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை...

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top