முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாசார மேம்பாட்டுக்கு
உழைத்தவர் ராசிக் பரீத்
இன்று அன்னார் நினைவு தினம்


முப்பத்துமூன்று ஆண்டுகள் கழிந்த போதும் சேர் ராசீக் பரீத் என்ற பெருமனிதரை இன்றும் நாம் நினைவிற் கொள்கிறோம்.
பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும் இவர் முன்மாதிரியைக் காட்டியவர். தியாக உணர்வுடன் சமூக, நாட்டு நன்மைக்காகப் போராடியவர்.ஐக்கிய இலங்கையையே அவர் விரும்பிச் செயற்பட்டார்.
கல்வி உயர்ச்சிக்காக இத்தலைவர் பெரிதும் பாடுபட்டார். முஸ்லிம் பெண்களின் கல்வி மேம்பாட்டில் அதிக ஆர்வம் செலுத்தினார்.முஸ்லிம் கல்வித் துறை முன்னோடியாக மதிக்கப்படும் சேர் ராசீக் பரீத்தின் சேவைகள் என்றும் மறக்க முடியாதவை.
இலவசக் கல்வியின் தந்தையான சீ.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கராவின் இலவசக் கல்வி இயக்கத்தை இவர் முன்கொண்டு சென்றார்.பல்வேறு உயர் பதவிகளை வகித்த அவர் அப்பதவிகள் மூலம் மக்களுக்கான சேவைகளை துடிப்பாக மேற்கொண்டார்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினராக, அரச கழக பிரதிநிதியாக, மேல் சபை உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, உதவிச் சபாநாயகராக, அமைச்சராக, இராஜதந்திரியாக, உயர் ஸ்தானிகராக என்றெல்லாம் பதவிகளை வகித்து இவர் மக்களுக்கு தொண்டாற்றினார். அரசாங்க மட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டன.
இதில் சேர் ராசீக்கின் பங்களிப்பு பெரிதாக இருந்தது. இவரின் முயற்சியால் முஸ்லிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் உருவாகின.முஸ்லிம் ஆசிரியர்கள், அதிபர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
பம்பலப்பிட்டி பகுதியில் சொந்தக் காணியை முஸ்லிம் மகளிருக்கான கல்லூரி அமைப்பதற்காக நன்கொடையாக வழங்கினார்.இந்த நன்மைகள் எல்லாம் சேர் ராசீக் பரீதுக்கே உரித்தாகும்.
முஸ்லிம்களின் பாரம்பரிய மருத்துவ முறையான யூனானி மருத்துவத் துறைக்கு இவர் புத்துயிரளித்தார்.யூனானி மருத்துவ பீடத்தை மூடிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அதனை எதிர்த்தார்.
கொழும்பில் இன்றும் தலைநிமிர்ந்து கம்பீரமாகக் காட்சி தரும் சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தை சேர் ராசீக் பரீத் உருவாக்கினார். முஸ்லிம் பாலர் வாசகர் நூலை சோனக இஸ்லாமிய நிலையம் மூலம் வெளியட்ட பெருமையும் இவரையே சாரும். சேர் ராசீக் பரீத் அகில இலங்கை சோனகர் சங்கத்தை நிறுவி அதன் மூலமும் தமது சமூக மக்களுக்கு சேவை புரிந்தார். முஸ்லிம் கவுன்சில் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு முஸ்லிம் தலைவர்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளை சேர் ராசீக் பரீத்தின் தலைமையில் ஆராய்ந்தனர்.
சேர் ராசீக் பரீத் போன்றவர்களை என்றென்றும் நன்றி உணர்வுடன் நாம் நினைவுபடுத்த வேண்டியது அவசியமாகும். -

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top