வதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணிடம்

அலுவலக முற்றத்தை கூட்டினால் மாத்திரமே
வதிவிடத்தை உறுதிப்படுத்த முடியும்
அநாகரிகமாக நடந்துள்ள பெண் கிராம அலுவலர்




அலுவலக முற்றத்தை கூட்டினால் மாத்திரமே வதிவிடத்தை உறுதிப்படுத்த முடியும் என்ற கிராம அலுவலரின் அறிவித்தலுக்கு அமைய குழந்தையுடன் சென்ற பெண் முற்றத்தை கூட்டிய பின் தனது வதிவிடத்தை உறுதிப்படுத்திச் சென்ற சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி, திருநகர் தெற்கு கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது வதிவிடத்தை உறுதிப் படுத்துவதற்காக முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துக்கொண்டு குழந்தையுடன் கிராம அலுவலரின் அலுவலகத்தை நோக்கிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், கடமையில் இருந்த கிராம அலுவலா் குறித்த பெண்னிடம் தனது அலுவலக முற்றத்தை கூட்டுமாறும் அதன் பின்னரே வதிவிடத்தை உறுதிப்படுத்தி ஒப்பம் இடுவேன் எனவும் அதிகாரத்துடன் தெரிவித்துள்ளார்.
இதன்போது குறித்த பெண் தனக்கு வீசிங் நோய் இருக்கிறது என பதிலளித்துள்ளார், எனினும் முற்றத்தை கூட்டினால்தான் வதிவிடத்தை உறுதிப்படுத்துவேன் என கிராம அலுவலர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வேறு வழியின்றி குழந்தையையும், வாடகைக்குபிடித்துச்சென்ற முச்சக்கர வண்டியையும் காத்திருக்க வைத்து விட்டு முற்றத்தை கூட்டிய பின்னர் கிராம அலுவலரிடம் கூட்டிவிட்டதாக தெரிவித்து தனது வதிவிடத்தை உறுதிப்படுத்தி சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் மக்களிடையே கடும் விசனத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. கிராம அலுவலர் தான் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு குழந்தையுடன் வதிவிடத்தை உறுதிப்படுத்த வந்த பெண்ணை இவ்வாறு நடத்தியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கிளிநொச்சி பிரதேச செயலாளரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top