வெள்ளத்தில் மலர்ந்த சகோதரத்துவம்
கேரள இந்துக் கோயில் வளாகத்தில்
முஸ்லிம்கள் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை



கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில், இந்து கோயில் வளாகத்தில் முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடத்தியது சமூக ஒற்றுமையின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது
கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாகப் பெய்த பெருமழை, ஏற்பட்ட வெள்ளத்தால் ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் இன்றி, அனைத்து மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடத்துவதற்கு இடமில்லாமல் தவித்த முஸ்லிம்களுக்கு இந்துக் கோயில் வளாகத்தில் இடம் அளித்து தொழுகை நடத்த வைத்தது சகோதரத்துவம், சமூக ஒற்றுமையின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் நேற்று ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்பட்டது. ஆனால், கேரளாவில் பெய்த மழையால், ஏராளமான நகரங்கள் இன்னும் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவரவில்லை.
குறிப்பாக திருச்சூர் மாவட்டத்தில் எரவத்தூர் அருகே கொச்சுக்கடவு இன்னும் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடத்த நேற்று இடமில்லாமல் தவித்தனர், நிவாரண முகாம்களில் சிறப்பு தொழுகை நடத்த முடியாத சூழல் இருந்தது.
இதை அறிந்த எரவத்தூர் நகரில் உள்ள இந்து கோயில் நிர்வாகிகள், அனைத்து முஸ்லிம் சமூகத்தினரையும் அழைத்து அங்குள்ள புரப்புள்ளிக்காவு ரத்னேஸ்வரி கோயில் வளாகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்தக் கோரினார்.

தாங்கள் கேட்காமலேயே கோயில் இடத்தில் தொழுகைக்கு இடமளித்த இந்துக்களின் செயலை முஸ்லிம்கள் வெகுவாகப் பாராட்டினர். வேதமந்திரங்களும், அரபிமொழியில் திருக்குர்ஆன் வாசகங்களும் ஒரே இடத்தில் சங்கமமாகின. ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புத் தொழுகையை நடத்தி மகிழ்ச்சியுடன் சென்றனர்.
இதேபோல மலப்புரம் மாவட்டத்தில், மழை வெள்ளத்தால், வீடுகளை இழந்து தவித்த இந்துக் குடும்பங்களுக்கு தொழுகை நடத்தும் பள்ளிவாசலில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, சேறும், களிமண்ணும், விஷச் பூச்சிகளும் நிறைந்த இரு இந்துக்களின் கோயில்களை சுத்தம் செய்யும் பணியில் முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மலப்புரம் மாவட்டம், சாலியார் கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு இந்துக் குடும்பங்களின் வீடுகள் இன்னும் வெள்ளத்தில் சிக்கி இருக்கின்றன. இதனால், அக்கம்படத்தில் உள்ள  பள்ளிவாசலில் இந்துக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் தங்கவைக்கப்பட்டு, அங்கேயே தூங்குவதற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், சிலர் நேற்று முன்தினம் தங்களின் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் சார்பில் அவர்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.
வயநாட்டில் உள்ள வென்னியோடு விஷ்ணு கோயில், மலப்புரத்தில் உள்ள மண்ணார்காடு ஐயப்பன் கோயில் ஆகியவை வெள்ள நீரில் சூழப்பட்டு தற்போது சேறு நிரம்பி, பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றன. இந்தக் கோயிலை சுத்தம் செய்யும் பணியில் அப்பகுதி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top