நாடாளுமன்றத்தில் 14 ஆம் திகதி வாக்கெடுப்பு
சபாநாயகர் உறுதி
தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல் முடிவடைந்தது
-    அமைச்சர் வாசுதேவ நாணயக்கார


நாடாளுமன்றம் எதிர்வரும் 14ம் திகதி கூடும்போது, அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடத்துவற்குத் தீர்மானித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று நடந்த  கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், வரும் 14ஆம் திகதி நடத்தப்படவுள்ள நாடாளுமன்ற அமர்வின் பணிகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போது, 14ஆம் திகதி, அமர்வு சம்பிரதாய அமர்வே இடம்பெற வேண்டும்  என்றும், ஜனாதிபதியின் ஆரம்ப உரையை அடுத்து, நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் கோரினர்.

அதற்கு, ஐதேக உள்ளிட்ட ஏனைய கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டனர். அன்றைய தினம் நாடாளுமன்றத்தில்  விவாதங்கள் எதனையும் மேற்கொள்ள முடியாது என சட்டம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.

அத்துடன், நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளை சட்டத்தின் கீழ் சபாநாயகரே அதன் நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்க வேண்டும் என்றும், ஏனைய கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதன் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள சபாநாயகர் கரு ஜெயசூரிய,  116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை சமர்ப்பித்துள்ளனர் என்றும், வரும் 14ஆம் திகதி, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்கும் ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து  வாக்கெடுப்பு இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பெரும்பான்மையை உறுதி செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்காக, தேவைப்பட்டால் நிலையியல் கட்டளைச் சட்டங்களை இடைநிறுத்த தயார் எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

சபாநாயகரின் இந்த முடிவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டம் தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல் முடிவடைந்தது என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top