23ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் அமர்வு வரும் 23ஆம் திகதிவெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய போது, உடனடியாகவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய வருகை தரவில்லை. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியே நாடாளுமன்றத்தைக் கூட்டினார்.

இதையடுத்து, புதிய தெரிவுக் குழுக்களை தெரிவு செய்யும் செயற்பாடு குறித்து அறிவிக்கப்பட்ட போது அதற்கு ஐதேக மற்றும் ஜேவிபி  உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அரசாங்கம் ஒன்று இல்லாத நிலையில் தெரிவுக்குழுக்களை அமைக்க முடியாது என்றும் அவர்கள் கூறினார்.

இந்த நிலையில், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக, நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, நாடாளுமன்றம் வரும் 23ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.
இந்த அமர்வில் அனுரகுமார திசாநாயக்க, தினேஸ் குணவர்தன, லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்னமும் நாடாளுமன்றத்தில் கூடியுள்ளனர்.

இன்றைய நாளுமன்ற அமர்வை பொதுமக்களும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பார்வையாளர் மாடம் மூடப்பட்டிருந்தது.

அத்துடன், சிறப்பு அதிரடிப்படையினர் நாடாளுமன்றத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top