கிழக்கு மாகாணத்தைத் தாக்கிய
பயங்கர சூறாவளி  நாளையுடன் 40 வருடங்கள்

நவம்பர் 23, 1978 அன்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தைத் தாக்கிய சூறாவளி 2018.11.23 ஆம் திகதியுடன் 40 வருடங்கள் கடந்துவிட்டன.
சுனாமியைப் போன்று சூறாவளி அனர்த்தமானது பல்லாயிரம் உயிர்களைக் காவு கொள்ளவில்லை. ஆனாலும் கிழக்கின் பெரும் பிரதேசங்களில் மரங்களையும் வீடு வாசல்களையும் தரைமட்ட மாக்கிச் சென்றிருந்தது.
” 1978 ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ம் திகதி இலங்கை வளி மண்டலவியல் அவதான நிலையம் தனது எச்சரிக்கையை வெளியிட்டது. வானொலியும் தினசரிப்பத்திரிகைகளும் இந்த எச்சரிக்கையை இலங்கை எங்கும் எடுத்துச் சென்றன.
வழமைபோல் மக்கள் இந்த எச்சரிக்கை செய்தியை அலட்சியமாக எடுத்துக் கொண்டனர். மீண்டும் 22 ம் திகதி வளிமண்டலவியல் அவதான நிலையம் எச்சரித்து.
”…… கிழக்குக் கடலில் வீசும் சூறாவளி இப்போது மட்டக்களப்பை நோக்கி வருகிறது. 200 மைல்களுக்கு அப்பால் இப்போது வீசுகிறது. இன்று காலை மட்டக்களப்பு கரையை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக கடும் புயல் காற்று வீசும். கிழக்குக் கடல் கொந்தளிப்புக் காணப்படும்….”
இந்த இறுதி எச்சரிக்கையையும் கிழக்கு மாகாண மக்கள் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டனர். எனினும் கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள் சிலர் இந்த எச்சரிக்கையால் விழிப்படைந்தனர். அவர்களால் என்னதான் செய்ய முடியும்?
அன்று மாலை நேரம் காற்று பயங்கரமாக வீசியபடி இருந்தது. அதன் சத்தத்தில் உயிர் போய்விடும் போலிருந்தது. தென்னை மரங்கள் ஆடிப் பயமுறுத்தின. பல சாய்ந்தன.
அன்று பெரும்பாலானவர்கள் அச்சத்துடன் ஆகாயத்தை நோக்கியவாறு படைத்தவனை நினைத்துக் கொண்டிருந்தனர்.. அன்றிரவு  எவரும் சரியாகச் சாப்பிட்டிருக்க மாட்டார்கள், தூங்கியிருக்கமாட்டார்கள். காற்று ஓய்ந்து விடாதா, சீக்கிரம் விடிந்து விடாதா எல்லோரினதும் மனம் ஏங்கியது. கிழக்குப்புறமாக தூரத்தில் உறுமி வரும் காற்று நெருங்கி வரும் போது சத்தம் அதிகரிக்கையில் அன்றிரவே உலகம் அழிந்துவிடப் போவதுபோல தோன்றியது. சுற்றிவர மரங்கள் முறிந்து விழும் ஓசைகளே கேட்ட வண்ணமிருந்தது இடையிடையே தென்னை மரங்கள் சாய்ந்து வீட்டு முகடுகளிலும் வளவுகளிலும் வீழ்ந்து கொண்டிருந்தன.
உலகைப் படைத்த அல்லாஹ்வின் நாட்டப்படி பலமாக வீசிய  காற்று ஓய்ந்து பொழுதும் விடிந்தது. வெளியில் வந்து பார்த்தபோது எல்லோருடைய வீடுகளிலும் தென்னை மரங்கள் விழுந்து கிடந்தன. வீடுகளில் இருந்த தகரங்கள்,ஓடுகள் தூக்கி வீசப்பட்டிருந்தன. பாதைகள் எல்லாம் மரங்கள் பல பக்கத்தாலும் விழுந்து மறிக்கப்பட்டிருந்தன. மின்சாரக் கம்பங்கள் கம்பியுடன்  சரிந்து பிரதான வீதிகளிலும் உள் வீதிகளிலும் கிடந்தன. மக்கள் நடமாடமுடியாத நிலை காணப்பட்டது. இதன் பின்னர் பல இரவுகள் அப்பிரதேசங்கள் இருளில் மூழ்கிக் கிடந்தது.
அன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பதவியில் இருந்தது. அரசாங்கத்தினதும் உலக நாடுகளின் உதவிகளுடனும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட சகல குடும்பத்தினருக்கும் இலவசமாக உலர் உணவுகள் வழங்கப்பட்டன.
இன்று பெரும் எண்ணிக்கையான மக்களால் அதிகமாக அருந்தப்படும் அங்கர் பால் மா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்று இலவசமாக வழங்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இச் சூறாவளியினால், கிட்டத்தட்ட 1000 பேர் இறந்து, ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 250,000 வீடுகள் முற்றாக அல்லது பகுதியாக சேதமாக்கப்பட்டு, 240 பாடசாலைகள் சேதமாகின. ஐந்தில் ஒரு மீன் பிடிப்படகுகள் அழிக்கப்பட்டு, 11 இல் 9 நெல் சேமிப்பு களஞ்சியங்கள் அழிக்கப்பட்டு, 90 வீதமாக தென்னம் பயிர்ச் செய்கை (28,000 ஏக்கர்) அழிக்கப்பட்டு சேதத்திற்குள்ளாகின. அரசாங்கம் 600 மில்லியன் ரூபாவிற்கு மேல் செலவு செய்தது.
கல்முனை ஸாஹிறாக் கல்லூரியை 1978ல் வீசிய சூறாவளி எவ்வாறு தாக்கியது என்பதைக்காட்டும் அரிய சில படங்கள் மர்ஹும் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

படங்கள்: நன்றி நஸீல் ஜெமீல்





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top