விலைகள் குறைப்பு, பொருளாதார சலுகைகள் அறிவிப்பு
– மஹிந்தவின் புதிய உத்தி
மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்ட வழிமுறை தொடர்பாக கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்புகளும் தோன்றியுள்ள நிலையில், புதிய அரசாங்கம் பொருளாதார சலுகைகளை அறிவித்து வருகிறது.
நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற, மஹிந்த ராஜபக்ஸ, நேற்று அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருள்களின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தும் அவசர நடவடிக்கையாக, இந்த விலைக்குறைப்புகள் அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பருப்பு மீதான வரி கிலோவுக்கு 5 ரூபாவினாலும், கோழி இறைச்சி மீதான வரி கிலோவுக்கு 5 ரூபாவினாலும், உழுந்து மீதான வரி 25 ரூபாவினாலும், உடனடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கோதுமை தானியத்துக்கான, வரி விலக்கு கிலோவுக்கு 6 ரூபாவில் இருந்து. 9 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீனி மீதான வரி 10 ரூபாவினால் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பெற்றோலின் விலை லீற்றருக்கு 10 ரூபாவினாலும், டீசலின் விலை லீற்றருக்கு 7 ரூபாவினாலும் நள்ளிரவில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது.
அறுவடைக் காலத்தில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான வரி 40 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் பல கடன், வரிச்சலுகைகளையும் அறிவிக்க மஹிந்த ராஜபக்ஸ திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதால், இறக்குமதிப் பொருட்களுக்கான செலவு அதிகரித்து வருகின்ற போதும், அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்தும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஸ விலை மற்றும் வரிக் குறைப்புகளை அறிவித்திருப்பது பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment