பெரும்பான்மையை நிரூபிப்பதில்
தோல்வி கண்டுள்ள மஹிந்த!
அடுத்து நடக்கப் போவது என்ன?



இலங்கை தற்போது அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் ஆட்சியை கொண்டு செல்வதில் புதிய பிரதமர் பாரிய பிரச்சனைக்கு முகங்கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது..

சமகாலத்தில் உத்தியோகபூர்வ பிரதமர் யார் என்பது தொடர்பில் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் புதிய அரசாங்கம் உள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளவதில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தோல்வி கண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது..

நேற்று மாலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த துமிந்த திஸாநாயக்கவுடன், பசில் ராஜபக்ஸ சுமார் 3 மணித்தியாலங்கள் கலந்துரையாடல் மேற்கொண்ட போதிலும் அது தோல்வியில் முடிந்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க உட்பட குழுவினரின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மஹிந்த தரப்பினர் உள்ளனர்.

அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் பசிலிடம் பல பதில்களை துமிந்த எதிர்பார்த்த போதிலும், உரிய பதில் கிடைக்கவில்லையாம்.

விசேடமாக நாடாளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு செல்வதென்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிடுவீர்களா? அல்லது தாமரை மொட்டில் போட்டியிடுவீர்களா என துமிந்த வினவியுள்ளார்.

எனினும் அதற்கு இன்னமும் தீர்மானிக்கவில்லை என பசில் கூறிய பதிலுக்கு துமிந்த உட்பட குழுவினர் இணங்கவில்லை.

இதனால் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளமையினால் மஹிந்த உட்பட குழுவினர் பாரிய சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 120 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலைக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் உட்பட பலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top