“எனது தந்தை பிராந்தியத்தில்
அமைதியைக் கொண்டு வந்தார்
இந்தியாவின் போரையே முன்னெடுத்தார்”
– நாமல் ராஜபக்ஸ
எமக்கான போரை மாத்திரம், நாங்கள் நடத்தவில்லை. நாங்கள் இந்தப் பிராந்தியத்துக்கான அமைதியைக் கொண்டு வந்திருக்கிறோம். எனது தந்தை பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வந்தார். போரின் போது இந்தியா எனது தந்தைக்கு நெருக்கமாக இருந்தது, இந்தியா பயங்கரவாதத்தை தோற்கடிக்க உதவியது, நாங்கள் இந்தியாவின் போரையே முன்னெடுத்தோம். என்று நாடாளுமன்ற உறுப்பினரும் மஹிந்த ராஜபக்ஸவின் மகனுமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் என்டிரிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“ஜனாதிபதியின் விருப்பம் மற்றும் அழைப்பின் பேரிலேயே, எனது தந்தை நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, நான்கு, ஐந்து மாதங்களாகவே மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஸவும் திட்டமிட்டு வந்தனர்
நாட்டில், பொருளாதார அரசியல் சமூக உறுதிப்பாட்டை கொண்டு வருவதற்கு என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து, கடந்த பல மாதங்களாகவே, அவர்கள் இருவரும் ஆராய்ந்து வந்தனர்.
நாங்கள் அறிந்தவரை இந்த பேச்சுகள் கடந்த நான்கு ஐந்து மாதங்களாகவே இடம்பெற்று வந்தன.
பழைய சகாக்கள் என்ற அடிப்படையில், 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அவர்கள் தொடர்பில் இருந்தனர்.
ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கான சதி குறித்து குறித்து ரணில் விக்கிமசிங்க அப்போது அவர் எதையும் கூறவில்லை. இதனுடன் தொடர்புடைய பிரதி பொலிஸ்மா அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். குரல் பதிவுகள் வழங்கப்பட்டன.
இந்தச் சதித்திட்டம் பற்றிய குற்றச்சாட்டு பாரதூரமானது. ஆனால் இதற்காக மாத்திரம் சிறிசேன ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆட்சி மாற்றத்துக்கு வேறு பல காரணங்களும் இருந்தன.
சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து பணியாற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் ஆரம்பத்திலிருந்து வெற்றியளிக்கவில்லை.
2015 ஆட்சி மாற்றம் ஏற்பட்ட முதல் நாளில் இருந்தே, இந்த கூட்டணி வெற்றிபெறாது என்பது எங்களுக்குத் தெரியும்.
இருவரும் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள்,அவர்கள் இருவரும் வெவ்வேறு அரசியல் கொள்கைகளை கொண்டவர்கள், அவர்களின் பொருளாதார சமூக அரசியல் கொள்கைகளிற்கு இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. ஆகவே இந்த விடயங்கள் ஒருபோதும் இணையாது.
ஆனால் துரதிஷ்டவசமாக அப்போது எனது தந்தையை தோற்கடிப்பதற்கான வாய்ப்பாக அவர்கள் இதனை கருதினார்கள்.
இந்த கூட்டணியின் முழு நோக்கமும் தேர்தலாக இருந்ததே தவிர, இவர்களிடம் நாட்டை ஆட்சி செய்வதற்கான திட்டமிருக்கவில்லை.
தற்போது இடம்பெற்றுள்ள மாற்றங்களால் இந்தியா கவலையடைய வேண்டிய அவசியமில்லை.
எனது தந்தையோ அல்லது அவரது அரசாங்கமோ எடுத்த எந்த முடிவின் பின்னாலும், சீனஅரசாங்கமோ அல்லது வெளிநாடொன்றின் செல்வாக்கோ இருக்கவில்லை.
கடந்த காலங்களில் இந்தியா – இலங்கை இடையே புரிந்துணர்வின்மை காணப்பட்டது எமக்குத் தெரியும்.
இந்தியா கவலையடைய வேண்டியதில்லை, இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியா பங்காளியாக விளங்கும்.
போரின் போது இந்தியா எனது தந்தைக்கு நெருக்கமாக இருந்தது, இந்தியா பயங்கரவாதத்தை தோற்கடிக்க உதவியது, நாங்கள் இந்தியாவின் போரையே முன்னெடுத்தோம்.
ராஜிவ் காந்தியை பிரபாகரன் படுகொலை செய்தார். எம் அனைவருக்கும் அது தெரியும். எனவே, எமக்கான போரை மாத்திரம், நாங்கள் நடத்தவில்லை. நாங்கள் இந்தப் பிராந்தியத்துக்கான அமைதியைக் கொண்டு வந்திருக்கிறோம். எனது தந்தை பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வந்தார்” என்றும் அவர் கூறியுள்ளார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment