245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை
2 கிலோ 200 கிராம் எடைக்கு தேறியது

  
உலகிலேயே மிகச்சிறிய அளவில் 245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை, தற்போது 2 கிலோ 200 கிராம் எடைக்கு தேறி உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சான்டியோகோ நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரின் வயிற்றில் வளரும் கருவுக்கு 23 வாரங்கள் 3 நாட்கள் மட்டுமே ஆகி இருந்தது. ஆனால் அந்த கரு, ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் எடுக்காவிட்டால் தாயின் உயிருக்கும் ஆபத்து என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில் இருந்து பெண் குழந்தை எடுக்கப்பட்டது. அப்போது குழந்தையின் எடை 245 கிராம் மட்டுமே இருந்தது. இதனால் அந்த குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்தில் இறந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறினர்.

ஆனால், மருத்துவர்களே வியக்கும் வகையில், அந்த குழந்தை தனது உயிரை தக்க வைக்க தொடர்ந்து போராடியது. இதையடுத்து, மருத்துவர்களும், தாதிகளும் குழந்தையை எப்படியாவது காப்பாற்றி ஆக வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட தொடங்கினர். அவர்கள் இரவு, பகல் பாராமல் கண்ணும் கருத்துமாக குழந்தையை பார்த்துக்கொண்டனர்.

இதன் பலனாக ஏறக்குறைய 6 மாத காலத்துக்கு பிறகு தற்போது அந்த குழந்தை உடல் நலம் தேறி, நலமுடன் இருக்கிறது. பிறக்கும்போது, வெறும் 245 கிராம் எடையில் இருந்த அந்த குழந்தை தற்போது 2 கிலோ 200 கிராம் எடைக்கு தேறி உள்ளது.

இதையடுத்து இந்த மாத தொடக்கத்தில் தாயும், சேயும் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். குழந்தையை தாயுடன் அனுப்பி வைக்கும்போது, அந்த குழந்தையை கவனித்துவந்த தாதியர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top