முஸ்லிம்கள் அநாவசியமாக
கைது செய்யப்படுவதை ஏற்க முடியாது


எத்தகைய சட்டவிரோத பொருட்களை வைத்திருந்தால் ஒருவர் கைது செயயப்படுவாரென்ற வரையறையொன்றை அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் தெளிவாக வெளிப்படுத்தவேண்டுமென மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அன்றாடம் திட்டமிட்ட ரீதியில் முஸ்லிம் மக்கள் அநாவசியமாக கைதுசெய்வதை ஏற்கமுடியாது எனத் தெரிவித்த ஆளுநர், சட்டவிரோத பொருட்கள் தொடர்பில் வரையறையொன்றை மக்களுக்கு தெளிவுபடுத்துவது முக்கியமென்றும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

1983 ஆம் ஆண்டு 13 சடலங்களே கொழும்புக்கு வந்தநிலையில் அதுவே 30 வருட யுத்தத்துக்கு வழிவகுத்தது என்பதால் நாம் புரிந்துணர்வுடன் செயற்படுவது முக்கியமாகும்.

இதுபோன்ற அழிவுகள் நாட்டில் இனியும் வந்துவிடக்கூடாது என்பதே எமது விருப்பம். எனினும் அப்படியான நிலையொன்று நாட்டில் ஏற்பட வேண்டுமென்றே சில தரப்பினர் செயற்பட்டு வருகின்றனர். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்படும் இவர்கள் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை.

சட்டம் எந்தவொரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ பாரபட்சமாக இருக்கக்கூடாது. தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம் மக்கள் திட்டமிட்ட ரீதியில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

முஸ்லிம் மக்கள் அனைவரையுமே சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. பாமர மக்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை சம்பந்தப்பட்டோர்கள் உணர்ந்து செயற்படவேண்டும்.

நாட்டில் பாதாள உலக செயற்பாடுகள் போன்று பெரும் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்ற நிலையிலும் 21 ஆம் திகதி குண்டுத் தாக்குதல்களை அடுத்து சாதாரண மக்களே பாதுகாப்புப் படையினரின் கெடுபிடிகளுக்கு இலக்காகி வருகின்றனர்.

தற்போது வாள்களும், கத்திகளுமே பிரச்சினையாகியுள்ளன. இந்த வாள்கள் இரும்புக் கடைகளிலும் விற்கப்படுகின்றன. அவை சட்டவிரோதமானவை என்றால் அந்த வாள்கள் இறக்குமதி செய்யப்படும் போது அதனைத் தடைசெய்திருக்க முடியும்.

எங்காவது, ஒரு துருப்பிடித்த வாள் கிடைத்தால் அதன் அயலிலுள்ளவர் கைதுசெய்யப்படுகின்றார்.இது எந்த விதத்திலும் ஏற்க முடியாது.

சில இடங்களில் பல தடவைகள் சோதனை செய்யப்பட்ட வீடுகள், பள்ளிகளுக்கு அருகாமையிலும் வாள்கள் அல்லது கைக்குண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. அங்கு அவை போடப்பட்டு மீள எடுக்கப்படுகின்றன என்பதே உண்மை. இல்லாவிட்டால் பலமுறை சோதனைசெய்த இடத்திற்கு இத்தகைய பொருட்கள் எவ்வாறு வரமுடியும்.

இத்தகைய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சு படையினருக்கு அறிவுறுத்துவது முக்கியமாகும். மக்களுக்கும் சட்டவிரோத பொருட்கள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.

பள்ளிவாசல்களை சோதனை செய்யவேண்டாமென்று நாம் ஒருபோதும் கூறவில்லை. பள்ளிவாசல்கள் புனிதமான சமயத் தலங்களாகும். அங்கு சப்பாத்துக்கால்களுடன் செல்வது கூடாது என்பதை நாம் கூறுகிறோம். நாய்கள் என்பது எமது மார்க்கத்திற்கே தவறான பிராணியாகும். இதற்கிணங்க பள்ளிவாசல்களுக்குள் நாய்களை அனுமதிப்பது எந்தளவில் தர்மமாகும். அவ்வாறு நாய்களை வைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமானால் முன்பே எமக்கு அறிவித்தால் கார்பட் போன்ற ஏதாவது விரிப்புகளை நாம் போட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

பாதுகாப்பு சபையில் இது தொடர்பில் முறையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதியிடமும் நான் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top