உண்மை வெளிவரும் போது
மண் எண்ணெய் பட்ட சாரை பாம்பு போல்
துடிக்கும் கூட்டு எதிர்க்கட்சி:
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பூச்சாண்டிகளை உருவாக்கி, அரசாங்கத்தின் மீது குறற்ம் சுமத்திய கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் வெளியாகும் தகவல்கள் உடலில் மண் எண்ணெய் பட்ட சாரை பம்புகள் போன்று துடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் பற்றி தெரியவரும் என்ற அச்சம் காரணமாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவுக்குழுவில் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாடு வழமைக்கு திரும்பிய வருகிறது. பாதுகாப்பு தரப்பினர் நாட்டின் பாதுகாப்பு நிலைமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அரசாங்கம் என்ற வகையில் ஐக்கிய தேசிய முன்னணியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி வெளிநாட்டில் இருந்தாலும் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்தார்.

எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விமர்சித்து, இந்த பிரச்சினையை வேறு பக்கம் திசை திருப்ப முயற்சித்தன. இதனால், ஐக்கிய தேசிய முன்னணி என்ற வகையில், நாங்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்தோம். இந்த தெரிவுக்குழுவின் ஊடாக சம்பவத்தின் உண்மையான கு்றறவாளி யார், பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளியிட நடவடிக்கை எடுத்தோம்.

இந்த சம்பவம் தொடர்பான தேடி அறிய வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேருக்கும் உள்ளது. இப்படியான நிலைமையில், கூட்டு எதிர்க்கட்சி தொடர்ந்தும் தெரிவுக்குழுவிற்கு எதிராக செயற்பட்டு வருகிறது.

ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்து அதனை ஊடகங்களுக்கு திறந்து, நாட்டு மக்களுக்கு செய்திகளை வழங்க சந்தர்ப்பம் கொடுக்கும் போது ஏன் இவர்களை அதனை எதிர்க்கின்றனர் என்பதுதான் எங்களுக்கு பிரச்சினையாக இருக்கின்றது.

தெரிவுக்குழுவை ஊடகங்களுக்கு திறந்து விட்டதால், எமக்கு பல தகவல்கள் கிடைத்தன. தேசிய பாதுகாப்புச் சபை இறுதியான பெப்ரவரி மாதமே கூடியுள்ளது. குண்டுகள் வெடிக்கும் வரை பாதுகாப்புச் சபைக் கூடவில்லை என்பது தெரிவுக்குழுவின் விசாரணைகளில் தெரியவந்தது. அத்துடன் 12 நாட்களுக்கு முன்னர் தாக்குதல் சம்பந்தான அறிவித்ததாக புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சாட்சியளித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான தகவல்கள் வெளியாகும் போது அது பற்றி பெரிதாக பேசி பூச்சாண்டிகளை உருவாக்கி, அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்திய கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உடலில் மண் எண்ணை பட்ட சாரை பாம்புகள் போன்று தற்போது துடிக்கின்றனர். ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான பொறுப்பாளி யார் என்பது தெரியவந்து விடும் என்ற அச்சத்தில் அவர்கள் இருக்கின்றனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நாலக டி சில்வா, கடந்தா 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி சஹ்ரானை கைது செய்ய பிடியாணை கோருகிறார். அப்படியான நிலைமையில், ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக செம்படம்பர் மாதம், அவர் கைது செய்யப்படுகிறார்.

நாமல் குமார என்ற எவரும் அறியாத ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய நாலக டி சில்வா கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் சஹ்ரான் தொடர்பாக அவர் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. புலனாய்வு பிரிவினரும், பாதுகாப்பு தரப்பினரும் தமது பணிகளை சரியான செய்துள்ளனர் என்பது தெரியவருகிறது. எனினும் அதற்கு அரசியல் தலைமையை வழங்க வேண்டியவர்கள் பொறுப்பை தவறவிட்டுள்ளனர்.

இந்த தெரிவுக்குழுவின் விசாரணைகள் தொடர்ந்தும் நடக்கும் போது மேலும் பல தகவல்கள் வெளியாகும். வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைய பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வராது. அமைச்சர் றிசாரட் பதியூதீனை பிடித்து தொங்குகின்றனர்.

மான் வந்து பயிரை சாப்பிட்டு விட்டு சென்றதும், மானை பிடிக்க முடியாதவர்கள், மான் தோலை தாக்குவது போன்ற செயலையே கூட்டு எதிர்க்கட்சியினர் செய்கின்றனர். கூட்டு எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களின் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப கூட்டு எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர்.

பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு பின்னர் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டப்படவில்லை. பாதுகாப்புக்கு பொறுப்பானவர் யார்?. ஏன் அவர் தனது பொறுப்பை தவற விட்டார்?. அத்துடன் அவருக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு பிரேரணையை கொண்டு வர வேண்டும்.

இந்த பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இருக்கும் போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக பெரிய பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். செய்திகளை பார்க்கும் போது ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை முஸ்லிம், முஸ்லிம் எனக் கூறுகின்றனர். இந்தளவுக்கு பெரிய முஸ்லிம் எதிர்ப்பை சமூகத்திற்குள் முன்னெடுத்துச் செல்கின்றனர்.

மீண்டும் இந்த நாட்டில் சிங்கள, முஸ்லிம் மோதலை உருவாக்க இவர்கள் வேலைகளை செய்து வருகின்றனர். ஜனாதிபதியின் அனுசரணையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்றே எமக்கு எண்ண தோன்றுகிறது எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top