மோடியைப் போன்று செயற்படுமாறு
ஞானசார தேரர் அழைப்பு



இலங்கை பௌத்த பூமியாகும். எனவே, அதை பாதுகாப்பதற்கு மகாநாயக்க தேரர்கள் அணிதிரள வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அறைகூவல் விடுத்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பப்பட்ட அரசியல் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

பௌத்த தேரர்களுக்கு கட்சி அரசியல் முக்கியமில்லை. அதேபோல் மன்னராக அரியணை ஏறவேண்டும் என்ற ஆசையும் இல்லை. எனினும், ஆள்பவர்களை தீர்மானிக்கும் சக்தி இருக்கின்றது. அவர்களை நல்வழிப்படுத்தவேண்டிய பொறுப்பும் எமக்குள்ளது.

எமது நாட்டு தலைவர்கள், இந்தியப் பிரதமர் மோடியை முன்னுதாரணமாக எடுத்து செயற்படவேண்டும். ஆனால், சொற்ப வாக்குகளுக்காக அவர்கள் அதைசெய்வதில்லை. இதன்காரணமாகவே மாற்று சக்தியின் தேவை உணரப்படுகின்றது.

இலங்கையில் 9 ஆயிரத்து 600 விகாரைகள் உள்ளன. அவற்றில் 7 ஆயிரம் விகாரைகளை ஒன்றிணைந்து, ஆயிரம் வாக்குகள் வீதம் திரட்டினால் கூட 70 இலட்சம் வாக்குகளை இலகுவில் பெற்றுவிடலாம். இதை எவரும் கவனத்தில் எடுப்பது இல்லை. இனியாவது விழித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கையானது பௌத்த பூமியாகும். எனவே, அதை கொள்ளையடிப்பதற்கு இடமளிக்க முடியாது.

ஆதாரங்கள் சகிதமே கடந்தகாலங்களில் நான் கருத்துகளை முன்வைத்தேன். இதனால்தான் மஹிந்த ஆட்சியின்போது, பல தரப்புகள் அழுத்தங்களை விடுத்தும் என்னை சிறையில் அடைக்க முடியாமல்போனது. இன்றும் பொறுப்புடனும், ஆதாரங்கள் சகிதமுமே கருத்துகளை முன்வைக்கின்றேன் என கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top