புலனாய்வுத் தகவல்
எந்தவொரு அதிகாரியாலும்
எனக்கு தெரிவிக்கப்படவில்லை
என்கிறார் ஜனாதிபதி



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக புலனாய்வு எச்சரிக்கைகள் குறித்து, ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்கூட்டியே எந்த அதிகாரியும் தகவல்களை வழங்கியிருக்கவில்லை.

பொலிஸ் மா அதிபர் மற்றும் மூத்த பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றிருந்த- ஏப்ரல் 8ஆம் திகதி நடந்த மாதாந்த பாதுகாப்புக் கூட்டத்தில் கூட, அதுபற்றி கூறப்படவில்லை.

தேசிய பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்ட விடயங்கள், அதிகாரபூர்வமற்ற முறையில் ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்த நிலையில், தேசிய பாதுகாப்புக் குழு உருவாக்கப்பட்டது.

இந்த தேசிய பாதுகாப்புக் குழு வாரத்தில் இரண்டு தடவைகள்  கூட்டப்பட்டது. ஜனாதிபதியும் வாரம் ஒருமுறை இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

நட்பு நாடு ஒன்றினால் வழங்கப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை தொடர்பாக, பாதுகாப்புச் செயலாளரோ, பொலிஸ் மா அதிபரோ,  அல்லது வேறு எந்த அதிகாரியோ, ஜனாதிபதிக்குத் தெரிவித்திருக்கவில்லை.என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக அறிவித்தல் வருமாறு.

ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இலங்கை பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போது தேசிய புலனாய்வுதுறைத் தலைவர் தெரிவித்த விடயங்கள் ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன.

அந்த ஊடக அறிக்கைகளில் 2019 பெப்ரவரி மாதத்தின் பின்னர் தேசிய பாதுகாப்புச் சபை கூடவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தேசிய பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் உத்தியோகபூர்வமற்ற விதத்தில் ஊடகங்களில் வெளிவந்த காரணத்தினால், தேசிய பாதுகாப்புச் சபையை விட வேறுபட்ட கட்டமைப்பினை கொண்ட தேசிய பாதுகாப்பு குழுவினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்பாதுகாப்புக் குழு கடந்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக கூடியதுடன், சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி அவர்களினால் வாரத்திற்கொருமுறையும் கூட்டங்களை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மேலும் 2019 ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் மாதாந்த கூட்டமும் ஜனாதிபதி அவர்களினால் கூட்டப்பட்டது.   இரண்டு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற அக்கலந்துரையாடலின்போதும் இத்தகையதொரு பயங்கரவாத திட்டம் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக எந்தவொரு அதிகாரியும் ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கவில்லை.

மேலும் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் இடம்பெறக்கூடுமென சர்வதேச நட்பு நாடொன்றிடமிருந்து கிடைக்கப்பெற்ற எந்த தகவல் பற்றியும் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் அல்லது வேறு எந்தவொரு அதிகாரியினாலும் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே இத்தாக்குதல் பற்றி ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாக வெளிவந்திருக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top